பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் பற்றி, எட்டு ஆண்டுகளுக்கு முன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் எழுதிய, ‘எத்தனால் எரிசக்தி’ கட்டுரை ஆச்சரியம் அளிக்கிறது. மாற்று எரிபொருள் குறித்த அவரின் தெளிவான பாதையை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்பற்றி இருக்க வேண்டும்.
சிற்பி, அப்துல் ரகுமான், காசி ஆனந்தன், புவியரசு, இன்குலாப் உள்ளிட்ட தமிழ் கவிதை எழுத்துலகில் பிரகாசிக்கும் கவிஞர்களின், 25 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, ராஜேஷ்குமார், கி.ரா., உள்ளிட்டோரின், ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
‘ஒருவராக இல்லாத கடவுள்’ என்ற கட்டுரை, வாசகரை சிந்திக்கத் தூண்டும். அதில், ‘கடவுள் ஒருவராக இருந்தபோதும், மனிதர்களும், மதங்களும், நேர்கோட்டில் நில்லாமல், தனித்தனியே நிற்பதால் மனிதர்கள் வாழும் உலகில், கடவுள் மட்டும் ஒருவராக இல்லை’ என, முத்தாய்ப்பாக முடித்துள்ளார் கட்டுரையாளர்.
‘டொர்னடோ எனும் அரக்கன்’ என்ற கட்டுரையில், டொர்னடோக்கள் பற்றிய விளக்கமும், அது விளைவிக்கும் சேதமும், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கதை, கவிதை, ஆன்மிகம், அறிவியல் என, அறிவு சார்ந்து, தரமாக வெளிவந்திருக்கிறது ஓம்சக்தி தீபாவளி மலர்.
சு.சரண்யா