முத்தமிழை முன்னிருத்தி, அமுதசுரபி தீபாவளி மலர் வெளிவந்துள்ளது.
‘கம்பன் காட்டும் சிறுதொழில்கள்’ என்ற ஆய்வு, ‘முகநூலில் முகம் பார்க்கலாம்’ என்ற அறிவியல், ‘என் மனைவி, வீட்டில் தான் சும்மா இருக்கா’ என்ற வாழ்வியல், ‘இயற்கை விவசாயமே இந்தியாவின் எதிர்காலம்’ என்ற வேளாண்மை என, பல்துறைகளில் இருந்த கட்டுரைகள் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன; அவை, ரசனையோடு சிந்திக்க வைக்கின்றன!
இல.கணேசனின், இலக்கிய கூட்டங்கள் பற்றி விமர்சனம் சிரிப்பு வெடி! சிவனுக்கு அரைக் கண் தான் என்ற, துணுக்கு அருமை. தமிழ்கூறும் நல்லுலகிற்கு, தங்களின் படைப்புகளை கொடுத்த தமிழறிஞர்களைப் பற்றி, தற்போதைய பிரபலங்கள் கூறும், ‘முன்னோடிகள்’ கட்டுரைகள் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன.
கார்டூனிஸ்ட் கேசவின் ஓவியங்கள், முதல் ராஜராஜனின் நினைவாலயம், திரைத்துறை சார்ந்த நாகேஷ் மற்றும் மனோரமா பற்றிய கட்டுரைகளும் பாராட்டத்தக்கவை. வளவள கட்டுரைகள் இல்லாதது, இந்த இதழின் சிறப்பு! கவிதை, சிறுகதை, நாடகம், ஆன்மிகம் என, முழுமையான மலராக வெளிவந்துள்ளது.
சி.கலாதம்பி