ஐ.ஏ.எஸ்., அதிகாரியான மு.ராஜேந்திரன், வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர். அவரது ‘பாண்டியர் செப்பேடுகள், சோழர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு’ ஆகிய நூல்கள், வரலாற்று ஆய்வில் புதிய தடத்தை தேடி பயணித்தவை.
அவர் எழுதி, அகநி வெளியீடாக, விரைவில், ‘பல்லவர் காலச் செப்பேடுகள்’ என்ற தலைப்பில், புதிய வரலாற்று நூல் வெளிவர உள்ளது. கி.பி., 305ம் ஆண்டில், யுவமகாராஜன் சிவஸ்கந்தர்வர்மனில் துவங்கி, கி.பி., 879ம் ஆண்டில், அபராஜிதவர்மனின் வரை, மொத்தம், 33 செப்பேடுகளை இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார்.
நூலில் இருந்து சில பகுதிகள்: சாருதேவியின் குணபதேயம் செப்பேடு(கி.பி.350களில்) கி.பி., 350ல் ஓர் அரசகுலப் பெண், பிராமணர் அல்லாத ஒரு விவசாயிக்கு வழங்கிய நிலதானம் பற்றிச் சொல்கிறது இச்செப்பேடு. குணபதேயம் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் கொண்டக்கூர் தாலுகாவில் உள்ளது. இந்த சாசனத்தை வழங்கிய சாருதேவி, பல்லவ மன்னன் யுவமகாராஜன் விஜயபுத்தவர்மனுடைய மனைவி ஆவாள்.
நூறு ஆண்டுகளுக்கு முன், சர் வால்ட்டர் எலியட் என்ற ஆங்கில ஆட்சியாளர், ஆந்திராவிலிருந்து பழைய பொருட்கள் பலவற்றை வாங்கிச் சேகரித்து வைத்திருந்தார். அந்தக் குவியலில் இந்தச் செப்பேடும் இருந்தது. பின், இச்செப்பேடு டாக்டர் ஹூல்ஸ், டாக்டர் ப்ளிட் என்பவர்களால் படிக்கப்பட்டு, கட்டுரைகளாக வெளிவந்தது. தற்போது இச்செப்பேடு, லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. மூன்று ஏடுகள் கொண்டது இச்செப்பேடு. மற்ற செப்பேடுகள் போல, ஏடுகளின் இடதுபக்கம் துளையிடாமல், ஏடுகளின் நடுப்பக்கம் துளையிடப் பட்டுள்ளது. இந்த ஏடுகளை இணைக்கும் செப்புக் கம்பியும், கம்பியில் ஓர் அரசுச் சின்னமும் உள்ளது.
சின்னத்தில், நின்று கொண்டிருக்கும் காளை ஒன்று இருக்கிறது. காளையின் முதுகுக்கு மேலே தெளிவில்லாத சில உருவங்கள் உள்ளன. இவை நட்சத்திரம், சூரியனாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.
முதல் ஏட்டின் முன்பக்கம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. பின்பக்கம் எழுதப்படவில்லை. மூன்றாம் ஏட்டிலும் உட்புறம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது ஏட்டின் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 16 வரிகள் உள்ளன. பிராகிருத மொழியிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளன. ராஜதடாகத்தின் அருகிலுள்ள குடிநீர்க் கிணற்றின் வலதுபுறம் ஆதுகன் என்பவன், பயிரிட்டு வந்த நிலத்தில், நாலு நிவர்த்தனம் பூமியை, தாலுரம் (தற்போதைய விஜயவாடா தாலுகாவில், கிருஷ்ணா நதியின் வடகரையிலுள்ள தாமலுாரு) என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நாராயணனுடைய கோவிலுக்கு, தனது ஆயுள், பலம் கூடுவதற்காக அளித்த செய்தியை இச்செப்பேடு கூறுகிறது.
–
அகநி