காசி என்ற சொல்லே தூய்மை, மங்கலம் என்ற பொருளுடையது. மங்கலத்தை தரும் சிவபெருமான் அங்கே அருள்பாலிக்கிறார். புத்தர், காசியின் தெருக்கள் வழியே சாரநாத் சென்றார். ஆதிசங்கரர் தனது தத்துவம் வெற்றி காண, வாதுபுரிந்து வெற்றிபெற்ற தலம் அது. குருநானக் பெருமகனார், கங்கைக் கரையில் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, கபீர்தாசரும், துளசிதாசரும் நடந்த பூமி என, ஆசிரியர் அடுக்கும் தகவல்கள் ஏராளம்.
அதேபோல கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி, அவுரங்கசீப் ஆகிய மன்னர்கள் அந்த ஆலயத்தை இடித்ததும், பொக்கிஷங்களை வாரிச் சென்றதையும் குறிப்பிடுகிறார். அவுரங்கசீப் சகோதரர் தாராஷுகோ ஏற்பாடு செய்த சர்வ சமய மாநாட்டில், குமரகுருபரர் இந்துஸ்தானியில் பேசியிருக்கிறார். ‘தனிமனிதன் தன் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தன் விதியையும், எதிர்காலத்தையும் தானே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் உடையவன்’ என்று கூறி, சைவநெறியை அங்கே விளக்கினார்.
அவரது பேச்சாற்றலில் மயங்கி, தாராஷுகோ வெகுமதி தர முன்வந்த போது, துறவி என்பதால் எதுவும் தேவையில்லை என்றார். பின் தங்குவதற்கு இடம் கேட்டதற்கு, தரப்பட்ட பிரம்மாண்ட நிலப்பரப்பு தான், இன்றும் காசி மடமாக இருக்கிறது. மேலும், தாராஷுகோ, விஸ்வநாதர் வழிபாட்டிற்கு பல அறக்கட்டளைகள் ஏற்படுத்தியிருக்கிறார்.
காசிக்கு நகரத்தார் செய்த கட்டளைகளும் நூலில் விளக்கமாக உள்ளன. ராமேஸ்வரம், ஆத்மார்த்தமான அமைதி தரும் திருத்தலம் என்று கூறும் ஆசிரியர், அந்த தலம் தொடர்பான மூர்த்தி, தீர்த்தம், தலம், புராணப் பெருமை, இலக்கியம் என்று பல்வேறு விளக்கங்களையும் கொடுத்துள்ளார். ராமநாத சுவாமி, நேபாள மன்னருக்கு குலதெய்வம்; ஆலயத்தில் பூஜை செய்யும் சிவாச்சாரியார், சிருங்கேரி மடத்து ஜகத்குருவிடம் தீட்சை பெறுவது சம்பிரதாயம் என்ற வரலாற்றையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சேதுகாவலர் என்றழைக்கப்படும் சேதுபதிகள் தமிழ் வளர்த்தது மட்டுமின்றி, அறநெறி ஆட்சி நடத்தியவர்கள் என்பதை வரலாற்றுப் பார்வையில் ஆசிரியர் போற்றியது சிறப்பாகும். மொத்தத்தில் காசி – ராமேஸ்வரம் நூல், பயண வழிகாட்டியாக மட்டுமின்றி, பல்வேறு தகவல்கள் கொண்ட, ‘சிறப்பு நூல்’ வரிசையில் இடம் பெறும் என்பதை மறுக்க முடியாது.
எம்.ஆர்.ஆர்.,