சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ.சேதுபதியின், 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல்.
இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல்.
தருணம் எனும் சொல் கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, நாடகம் என, தொடரும் பல துறைகளிலும், எழுத்து வண்ணம் காட்டி வரும், ஆசிரியரின் நடைச் சிறப்பு சுவைத்து மகிழத்தக்கது.
உலகத்தின் உயிர் மூச்சான இயற்கையை காத்தல் நெறியில் விளங்கும், இளங்கொடிப்பட்டி எனும் மலையகச் சிற்றூர் நம் மனம் கவர்கிறது. திருநாவுக்கரசரை ஆன்மிகப் புரட்சியாளர் என்றும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரை (பெரியவர்) குறள்நெறித் தொண்டர் என்றும் தக்கவாறு காட்சிப்படுத்தி உள்ளார்.
– கவிக்கோ ஞானச்செல்வன்