சொல்லில் அடங்காத உலகத்தை, ஏதேனும் ஒரு தருணத்தில் எல்லோரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில், ‘பராக்கா‘ எனும் திரைப்படத்தை முன் வைத்து, ஒரு விமர்சனப் பார்வையாக வந்துள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பு. ‘பராக்கா’ ஆவணப்படத்தில், பழங்குடி இனச் சிறுவன், தனது பசுமை உலகத்திலிருந்து வெளியேறத் துடிப்பதையும், பரவசமோ பதற்றமோ அற்று அது உணர்த்தும் பெருத்த அமைதி, காண்பவரை உறங்கவிடாமல் செய்யும் நிதர்சனத்தையும், நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வகையில் துல்லியமாய் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.
‘பராக்கா’வை தனது எழுத்துக்களின் வாயிலாக முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்ளும் அதேநேரம், தனது தொடர்ந்த தேடலால், விமர்சன நோக்கில் அணுகி, உளப்பூர்வமாக மனதை நெகிழச் செய்த பராக்காவின் உள் உணர்ச்சியை, நிறைவு கொள்ளவே செய்கிறார், நூலாசிரியர். ஆரவாரங்களுக்கு மத்தியில் ஒரு பெருத்த மவுனத்தோடு உலகம் மெதுவாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது, இந்த சொல்லில் அடங்காத உலகம். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. சினிமாவை நேசிப்போர் அவசியம் படிக்க வேண்டிய விமர்சன நூல்.
ஸ்ரீநிவாஸ் பிரபு