ஒரு வரலாற்றுப் புதினம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரி இந்த நூல். கலிங்கத்துப் பரணி காலம் தான், கதை நிகழும் காலம். குலோத்துங்க சக்கரவர்த்தியும், கருணாகரனும், இன்னும் பல கதை மாந்தர்களும் நாம் அறிந்தவர்களே. இந்த வரலாற்று நாயகர்களை தனது காப்பியத்திலிட்டுக் கதைப்படுத்தி, வாசகரைச் சோழ தேசத்தில் வாழ்வதுபோல் ஓர் மயக்க நிலையை ஏற்படுத்தி விடுகிறார்.
காலிங்கராயரின் உதிரத்தில் மீண்டும் காஞ்சியை ஆள வேண்டும் எனும் நெருப்பு கனன்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதையும், தாயாக வரித்துக்கொண்ட சோழமாதேவியிடம் தாய்ப்பாசம் காணும் கருணாகரனின் நெகிழ்ச்சியையும், தமிழரின் வீரத்தை வல்லினப் புனைவுகளால் விவரிப்பதையும் மிகச் சாதுர்யமாகச் செய்து விடுகிறார், நூலாசிரியர். யாழில் அருள்மொழி நங்கை இசைக்கும் மேளகர்த்தா ராகமான அரிகாம்போதியில் பஞ்சமம், ஷட்ஜமம், மத்திமத்தின் சுத்தம், அவளது தேவாரத்தில் இசைக்கும் கமகங்களின் விதங்கள், சுரங்கள், அனுசுரங்கள், காந்தாரம் என்று இசை நுணுக்கங்களைப் புனைந்து முன்வைக்கும் விதம் நூலாசிரியரின் இசை மீதான அதீத ஈடுபாட்டை இயம்புகின்றன.
கவிஞர் பிரபாகர பாபு