ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருந்த ஆசிரியர்களில் பலர், மிகுந்த அறிவாளிகளாகவும், லட்சியவாதிகளுமாய் திகழ்ந்தனர். தம் ஆசிரியப் பணியில் மிக மிக ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விளங்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது போன்ற அக்கறையுடன் பாடம் நடத்தினர்.
நூலாசிரியர், அப்படிப்பட்ட ஆசிரிய ரத்தினங்களிடம் பயின்று, இன்று சமூகத்தில் மிக உயரிய நிலையில் இருப்பவர். அந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி கூறும் வகையில், தனது பல அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியரின் ஆழ்ந்த குரு பக்திக்கும், அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பிற்கும் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு.
நூலாசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா. விழாவுக்கு தலைமை, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். புத்தகங்களை வெளியிடுபவர், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி.
அவர்களை வரவேற்கவும், புத்தகங்களைப் பற்றிய அறிமுக உரை ஆற்றவும் மைக்கைப் பிடித்த நூலாசிரியர், ‘ஸ்ரீகுருப்யோ நமஹ’ என்று சொல்லிவிட்டு, ‘என் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் என் ஆங்கிலப் பேராசிரியர்கள் திரு.ஆர்.ராஜரத்னம் அவர்களே, திரு.தி.சிவசங்கரன் அவர்களே, உங்களுக்கு என் நமஸ்காரங்கள்’ என்று குரு வணக்கம் செலுத்திவிட்டு, சம்பிரதாய முறைப்படி, ‘முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்களே, தலைமை நீதிபதி அவர்களே’ என்று பேசத் துவங்கினார்.
தன் உரையில், நாட்டின் முதல் குடிமகனாக இருந்தவருக்கும் மேலான ஸ்தானத்தைத், தன் ஆசிரியர்களுக்குத் தந்த இவரின் குரு பக்தியை என்னவென்று வியப்பது! நூலைப் படிக்கும்போது, ஆசிரியர் – மாணவர் உறவு அன்று இருந்ததற்கும், இன்றிருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணுகையில், இதயம் கனப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நூல், எல்லா கல்வி நிலைய நூலகங்களிலும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
மயிலை சிவா