மத்திய அமைச்சரின் ஊழல் குறித்த ரகசியங்களை வெளியிட, ஒரு பத்திரிகை ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் தான், இந்த நாவலின் கதைக்களம். ‘ப்யூர் இந்தியா’ பத்திரிகையின் எடிட்டர் ஆகாஷ், உதவி ஆசிரியர் ஜீரோ, தாராசிங், ரகுவீர் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர்.
பத்திரிகை நிருபர் நெல்சனின் மரணத்தோடு துவங்கும் இந்த நாவல், அடுத்தடுத்த சம்பவங்களில், வாசகரை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. சம்பவங்களின் கோர்வையில், வாசகனுக்கு சலிப்பு ஏற்படாமல், நகர்த்திச் சென்றது நூலாசிரியரின் சமர்த்தியம்.
‘திரில்’ நாவலுக்கே உரிய, ‘அடுத்து என்ன’ என்ற பரபரப்பு, இந்த நாவலில் இருக்கிறது. மத்திய அமைச்சரின் சொத்துக்குவிப்பு பற்றிய ஆவணங்களை வெளியிடுவது தான், ஆகாஷின் நோக்கம்; ஆனால், அமைச்சர் பெயர் உட்பட, அவர் பற்றிய எந்த தகவலும் இல்லாமல், அமைச்சரின் பினாமியே, நாவல் முழுவதும் வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருப்பது திருப்தியை தரவில்லை.
துவக்கத்தில் இருந்து, வேகம் குறையாமல் பயணிக்கும் நாவல், ‘கிளைமேக்சில்’ கதாநாயகனின் புத்திசாலித்தனத்தை முன்வைத்து முடிக்காமல், சாதாரணமாக முடித்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.
சி.கலாதம்பி