அறிவியல் தமிழ் அறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி எழுதியுள்ள இந்த ஆய்வு நூல், ஒப்பிலக்கிய வகையைச் சேர்ந்த மிக உன்னதமான நூல். உலகத் தத்துவ ஞானியர் கற்பனையில் படைத்த உலகங்களை விட, வள்ளுவர் உருவாக்கிய உண்மை உலகம் எப்படி உயர்ந்து நிற்கிறது என்று சான்றுகளுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல்.
கடந்த, 2,400 ஆண்டுகளுக்கு முன், கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோ எழுதிய குடியரசு கற்பனைக் காவியம், முதலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதைஅடுத்து, லண்டனில் பிறந்த தாமஸ்மோரின் கற்பனை நகரான உட்டோபியா கருத்து, அலசப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிரான்சிஸ்பேகனின், ‘புது அட்லாண்டிஸ்’ கற்பனையும், கேம்பனெல்லாவின், ‘சூரிய நகர்’ கற்பனையும், ஆந்திரியேவின், ‘கிறிஸ்டியோனாவும், கனவில் மிதக்கும் கற்பனை நகரங்கள். இவர்களுடன் திருக்குறள் கருத்துகளை இணைத்து பார்க்கிறார் ஆசிரியர். காணல், கருதல், ஆன்றோர் வாக்கு மூன்று வகையிலும் குறளை விளக்குகிறார்.
வீடு நன்றாக இருந்தால், நாடு நன்றாக உயரும். எனவே, இல்லறத்தில் கணவன், மனைவி பங்களிப்பை உலகில், வள்ளுவர் போல், யாருமே வரையறுக்கவில்லை என, சான்றுகளுடன் சவால் விடுகிறார் ஆசிரியர்.
முனைவர் மா.கி.ரமணன்