அரசு பள்ளியில் படிக்கும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் மனங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி தான் இந்த சிறுகதைத் தொகுப்பு. முகம் பார்த்து பேச மறுக்கும் மாணவன், உணவுக்கு வழியில்லாத சிறுவன், தற்கொலை எண்ணத்துடன் திரியும் சிறுமி, தாழ்வு மனப்பான்மையை மறைக்க முரடனாக வேடமிடுபவன் என்று இந்தக் கதைகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும், நாம் வெவ்வேறு பெயர்களில், தோற்றங்களில் தினம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
வளரிளம் பருவத்தில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள், வாழ்வின் பிற்பகுதி வரை துரத்திக் கொண்டே வருகின்றன.
நம் பிள்ளைகளின் மனதில் விதைக்கும் நம்பிக்கைகள், இப்போது பலன் தராது போலத் தோன்றினாலும், அவர்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு புள்ளியில் அவர்களைக் கைதூக்கி விடும். இதைச் செய்ய நிறையப் பொறுமையும் அன்பும் தேவை. இந்தத் தொகுப்பு அதைச் செய்கிறது. இந்தக் கதைகளைப் படித்த பின், உங்கள் குழந்தைகளை நீங்கள் அணுகும் விதம் மாறிவிடும். இந்த நூல் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கான நூல்.
– ஷான்