பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி, என்னை விட்டுவிட்டுப் போய், 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே வெளிப்படுத்திக் கொண்டால் தான் உண்டு.
என் ஒரே மகள் பிரேமாவுக்கு, நான் அப்பா அல்ல; பேங்க் சேவிங்ஸ் அக்கவுன்ட்; அவ்வளவுதான். அவ்வப்போது பணம் வித்ட்ரா செய்வதற்காக, என்னோடு பேசுவாள். பின் பாசம் எப்படி வரும்?’ என்று சொல்லி ஸ்வர்ணாவுக்கு தூண்டில் போடுகிறார் மகேந்திரன்.
பிறகு என்ன ஆயிற்று? பணம், பதவி, பகட்டு, ஒரு தொழிலதிபரை எப்படி சபலம் என்ற சேற்றில் வழுக்க வைத்தது என்பதை, விறுவிறுப்பான கற்பனைக் கதையாக, கச்சிதமாகத் தீட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.
எஸ்.குரு