குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப் பெறும் பன்னாலால் எழுதிய, ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான பீட விருதுபெற்றது. குஜராத்தில், 1900ல் நிகழ்ந்த கடுமையான பஞ்சம் தான் நாவலின் பின்புலம். கதாநாயகன் காலு, கதைத் தலைவி ராஜு இடையிலான காதல், நாவலின் மையம்.
அவர்களின் திருமணம் தடைபட்டதை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் திருமணத்தைத் தடுக்க முனைந்து அதில் வெற்றி காண்கிறது ஒரு குடும்பம். காலுவின் கிராமத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கால்நடைகளும், விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. மக்களும் உண்ண உணவின்றிச் சிரமப்படுகின்றனர். தானியங்கள் ஊர்ப் பெரிய மனிதர்களால் பதுக்கப்படுகின்றன. ராஜுவும், காலுவும் ஒன்று சேரும் சந்தர்ப்பம் பஞ்ச காலத்தில் தான் துவங்குகிறது. இருவருமே பட்டினி கிடந்து சாகத் தயாரானாலும், காதல் தீ அணையாமல் இருக்கிறது. காலுவின் காதலுணர்வுகள் கவித்துவமாய் விரிகின்றன. வர்ணனைகள் அருமையாக உள்ளன. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல், படிப்பதற்கு சுவையாய் அமைந்திருப்பது, பாராட்டுக்குரியது.
– ராம.குருநாதன்