நிற்காமல் வெகு தூரம் ஓடுகிறீர்கள். பல நிலப்பரப்புகள் கடந்து வருகிறீர்கள். திடீரென்று பசும்புல்வெளி வருகிறது. கால்களில் வெண் பனித்துளிகள் படும்படி ஓடுகிறீர்கள். சில நிமிடங்களில் கடுமையான மலைப் பிரதேசம் வருகிறது. விடாமல் ஓடுகிறீர்கள். எதிர்பாராத வேளையில் எந்தச் சலனமும் இல்லாத ஊர்ச்சாலை வருகிறது. மேலும் ஓடுகிறீர்கள். சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வறண்ட பாலைவனம் வருகிறது. முயன்று ஓடுகிறீர்கள். ஆச்சரியப்படும்படி குளிர்ந்த காற்றுடன் மெல்லிய மழைத் தூறல். ஓட்டம் தொடர்கிறது. மறுபடியும் புல்வெளிப் பாதை என்று நீள்கிறது.
இப்படி இருக்கிறது ‘சுப்ரஜா சிறுகதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு. 30 ஆண்டுகளாக ஆசிரியர் எழுதி வந்துள்ள பல சிறுகதைகளை ஒன்று திரட்டி, ஒரு மூச்சில் படித்தால் மேற்சொன்ன ஓட்டம் நினைவுக்கு வரும்.
கடந்த, 1980களின் தேவைக்கேற்ப எழுதிய இவர், திடீரென்று 2015க்குத் தொடர்பான முகநூல் பற்றிய கதை சொல்லி, வியப்பில் ஆழ்த்துகிறார். அதிலும் ‘ஹனி டிராப்’ என்னும் உளவு முறையைக் கையாளும் விதமாய் எழுதியுள்ளது, ஒரு சபாஷ் போட வைக்கிறது.
பெரும்பாலான கதைகள் ஆண், பெண் உறவு தொடர்பானவை. முதிர்கன்னிப் பிரச்னை, வரதட்சணை, பொருந்தாக் காமம், வஞ்சம், நேர்மை, பெண் விடுதலை, சில பழைய பழக்க வழக்கங்கள், ஓரினச்சேர்க்கை என்று பல திசைகளிலும் கதைகள் செல்கின்றன. சிலவற்றில் முடிவு ஊகிக்கும்படியாக இருந்தாலும் பல கதைகளில், ‘சுஜாதாத்தனம்’ பளிச்சிடுகிறது.
இவர் எங்கு இருந்தாலும், அந்தச் சூழல் பற்றிய கதை ஒன்றை உருவாக்கிக் கொண்டே இருந்திருப்பார் போலும். அவ்வளவு பார்வைகள், சம்பவங்கள். ஆனால், கதைகள் எதிலும் தேவையற்ற வர்ணனைகள் இல்லை. ‘நச்’ என்று சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.
அர்ச்சகர் பற்றிய கதை ஒன்றில் நன்கு படித்த ஒரு இளைஞர் அர்ச்சகராக ஆக வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய நிலை. அப்போது அவரது நிலையில் இருந்து பார்வை எப்படி இருக்கும் என்று அழகாகக் காண்பிக்கிறார் ஆசிரியர்.
‘அப்பா’ என்னும், குடும்பத்தைக் கவனிக்காத தந்தை ஒருவர் பற்றிய கதை, நெடுநாட்கள் நெஞ்சில் நிற்கும் என்று தோன்றுகிறது. தொடர்ந்து வரும் ‘அம்மா’ சிறுகதை, கண்களில் நீர் வரவழைப்பது.
கடந்த, 1980கள் துவங்கி, 2016 வரையில் ஒருவர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஒரு முப்பதாண்டு கால, ‘பாஸ்ட் பார்வேர்ட்’ பார்வை வேண்டுவோர், ‘சுப்ரஜா சிறுகதைகள்’ தொகுப்பைப் படிக்கலாம்.
ஆமருவி தேவநாதன், சிங்கப்பூர்