முகப்பு » கதைகள் » ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர் நாவல்கள்

விலைரூ.1000

ஆசிரியர் : ஜெயந்தி சங்கர்

வெளியீடு: காவ்யா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கடல் கடந்த வாழ்க்கை அனுபவம் உள்ள, தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுதான். சிறுகதை எழுதுவோர் விரல்களின் எண்ணிக்கையில் வருவார்கள். நாவல்கள் எழுதுவோர், கட்டைவிரல்களின் எண்ணிக்கைக்குள் வந்துவிடுவார்கள்.
சீனர், தமிழர், மலேய மக்கள் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் வாழ்க்கையிலிருந்தும், தனது இந்திய வாழ்க்கையிலிருந்தும் பெற்ற அனுபவங்களின் திரட்சியாகவும் நீட்சியாகவும், ஜெயந்தி சங்கர் இந்த நாவல்களை எழுதியுள்ளார்.
சீனக் கவிதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்ததன் மூலம் ஏற்கனவே கவனம் பெற்றவர்.  உலகப் பொருளாதார மயக்கச் சூழலில், ஊர் ஊராக இடம்பெயர்ந்து வாழ்வது தனித்த அனுபவம். ‘திரிந்தலையும் திணைகள்’ என்னும் தலைப்பே அதைச் சுட்டிவிடுகிறது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ‘கரிகாலன் விருது’ பெற்ற அந்த நாவலுடன் குவியம், மனப்பிரிகை, நெய்தல், வாழ்ந்து பார்க்கலாம் வா(ங்க)... என பத்தாண்டு உழைப்பின் பலனான மேலும் நான்கு நாவல்களின் தொகுப்பு இது. அட்டவணையில் குறிப்பிடப்படாத சிறுகதைகள் சிலவும் வாசிக்கக் கிடைப்பது வாசகர்களுக்கு அதிர்ச்சிகர மகிழ்ச்சியைத் தரவல்லதாகும்.
வாசகர்கள் உடலளவில், கடல் கடக்காமலேயே சிங்கப்பூர் மக்களின் வாழ்நிலை, மேட்டிமைகள், மயக்கங்கள், புவியியல், உளவியல் அவசங்கள் ஆகியவற்றை விலாவாரியாக எடுத்தியம்புவதில், கடுமையாக உழைத்ததன் பலன் பக்கத்துக்குப் பக்கம் தெரிகிறது. (தமிழில் பரவசம் என்ற வார்த்தை பயன்பட்ட அளவுக்கு, அவசம் பயன்படவில்லை).
சிங்கப்பூர் மட்டுமல்ல இந்திய ஒட்டுறவும் வீட்டுறவும் நாட்டுறவும் இவரது எல்லாக் கதைகளிலும் இழையோடிக் கிடக்கின்றன. பண்பாட்டுப் பரிவர்த்தனையின் இலக்கியப் பதிவு ஆவணமாக ஜெயந்தி சங்கரின் எழுத்துக்கள் திகழும். உலக மாந்தராக மாறுவதன் முயற்சியாக, பாகங்கள் பிரித்த பின்னும் பழைய பாகத்தின் அத்தியாய எண் தொடர்ச்சியே வருவது, ரோமன் எண்களில் அத்தியாயம் பிரிப்பது என, சாமானியத் தமிழ் மனம் ஏற்க இயலாத வடிவமைப்பும் இதில் உண்டு.
‘குவியம்’ நாவல், அருமையான ஒரு பரிசோதனை முயற்சி. நூலின், 937ம் பக்கத்துக்குப் பிறகு பின்னிணைப்புகளில், எழுத்தாளர் பற்றி சக எழுத்தாளர்களது கருத்துப் பகிர்வும் விமர்சன விதந்தோதுதல்களும் கிடைத்திருப்பது, நூலின் கனத்தை மேலும் கூட்டுகிறது.
‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல், முடிவை விட பயணமே முக்கியம்’ ஆகிய தலைப்புகளில் ஜெயந்தி சங்கரின் விரிவான பேட்டிகள், அவரது நாவல்களை மேலும் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன. இது நூலின் மீதான கவனத்தைக் கூட்டுகிறது.
தனது பரந்த வாசிப்பு அனுபவத்தை அவர் கூறும்போது, ‘இன்னும் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்’ என உரிமையுடன் அவரிடம் கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.
காவ்யா வெளியிட்ட நேர்த்தியான புத்தகங்களில் இதுவும் ஒன்று. கதாபாத்திரங்கள் சந்திப்புகள் நேரும் சமயங்களில் தூரிகையைப் பயன்
படுத்த வேண்டிய வாய்ப்பு இருக்கும் இடங்களில், ஜெயந்திசங்கர் தேர்ந்த ஒரு வீடியோகிராபராக மாறிவிடுகிறார். கதையில் கருத்தொன்றுவதற்கு கவனம் கோரும் சித்திரங்களாக அவை இருக்கின்றன.
மனங்கொள்ளத் தக்க பறவையின் வருகை போல இருக்கிறது இந்நூல். படிக்கும்போது பறவையின் உடலின் எடையும் இறக்கைகளின் எடையும் சம அளவில் இருக்கும் ஆச்சரியம் தான் இந்தப் புத்தக வரவின் வெற்றி.

க.சீ.சிவகுமார்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us