கற்கண்டாய், கரும்பாய் பலாவாய் எக்காலத்தும் இனித்திருக்கும் சங்க இலக்கியங்கள். கனியிடை ஏறிய சுளையையும், முற்றல் கழையிடை ஏறிய சாற்றையும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சி இந்த நூல்.
பண்டை மரபு எனும் மண்ணுக்குள் வேரூன்றி புதுமை என்னும் விண்ணுக்குக் கிளை நீட்டியுள்ளார் நூலாசிரியர். முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் மாறாமல் பண்டிதருக்கு மட்டுமே புரிந்த சொற்கட்டை பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமைப்படுத்தியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில சங்கப்பாடல்களுக்கும் சங்க இலக்கியங்களுள் பொன்னெனப் போற்றத்தக்க சில வரிகளுக்கும் பொருட்சிதைவின்றி புனைந்த புதுக்கவிதை தொகுப்பே இந்த நூல். ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’ (புறநானுாறு – 183) எனும் புறநானுாற்று அடிகளை, ‘சமூக வேற்றுமையால் சரிவுற்று வீழ்ந்தபோதும் சிறப்புடன் கற்றிருந்தால் சீர்செய்யும் இவ்வுலகம்’ எனப் புதுக்கவிதையால் புனைந்துள்ளார்.
‘பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ... அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’ (ஐங்குறுநூறு – 391)
எனும் அடிகளை, ‘அழகிய கூந்தலுடை – என் அருமை மகள் விரைந்தே இல்திரும்ப கரைந்தே உரைத்திடுவாய் கறியுணவு சமைத்துப்பொற்கலத்தில் படைப்பேன்’ எனப் படிக்கும் போது தான் நமக்குப் பொருள் புலனாகிறது.
செம்மாந்து நிற்கும் பழந்தமிழ்ச் சொற்களைச் சிராய்ப்பின்றி சீரிளமையுடன் திகழச் செய்துள்ளார் நூலாசிரியர்.
புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதலின் போது வெளிப்படும் நுண்ணுணர்வுகளைத் தலைவியின் முகபாவங்களில் உலா வரச் செய்துள்ளார், ஓவியர் சண்முகவேல். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் சண்முகவேலின் எழிலார்ந்த ஓவியங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
இந்நூலுள் உள்ள ஒவ்வொரு கவிதையும் பேசும் ஓவியமாகவும், ஒவ்வொரு ஓவியமும் பேசாத கவிதையாகவும் விளங்குகின்றன. நேர்த்தியான நூற்கட்டமைப்புடைய இந்த நூல், சங்க இலக்கியங்களின் ஒரு மீள் பார்வையாகும்.
புலவர் சு.மதியழகன்