மாரிஷஸ் (மொரீஷியஸ்) தீவில் இந்தி பேசுவோர் கணிசமாக உள்ளனர். அவர்கள் விடுதலைக்கு முன்னும், பின்னுமான காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பான இந்த நூலில், 40க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. மாரிஷஸ் இலக்கிய வரலாற்றினை விரிவாக முன்னுரை தருகிறது. அத்தீவில் வாழும் இந்தி எழுத்தாளர்களின் சிறுகதை இலக்கிய வரலாற்றினை அறிந்து கொள்ள அது துணை செய்கிறது.
இந்திய விடுதலைக்கு முன்பே அத்தீவிற்குச் சென்று குடியேறியது; ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு ஆளானது; விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தந்தது; உரிமைப்போரில் ஈடுபட்டுத் துயருற்றது, சமுதாயம், தனிமனிதச் சித்திரிப்பு, குடும்ப உறவுகள், நாகரிக வாழ்க்கை, கலாசாரச் சீரழிவு முதலியவை இக்கதைகளில் காணப்படும் மையக் கருத்துக்கள். விடுதலை பெற்ற பின், அத்தீவில் வசிக்கும் ஒரு சிறிய விவசாயியின் வாழ்க்கை எத்தகைய அவலமும் துயரும் கொண்டுள்ளது என்பதை, ‘அந்த இடைப்பட்ட மனிதன்’ கதை காட்டுகிறது.
ராம.குருநாதன்