இரா.முருகனின் நவீன வகை வெளிப்பாட்டுக்குத் தலைப்பாக, இவ்வளவு பழைய பாடல் எனக்கு நினைவு வந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எனது சமாளிப்பாக முருகனின் கதைகளை மலையாளம், மதராச பட்டணம், மராட்டி மற்றும் டில்லியும் சில வெளிநாடுகளும் ஆகியவையே அவரது கதைக் களங்கள் என திணைப்படுத்திவிட முடியும்.
காலம் மறந்து பூத்த காட்டுமரமாக இரா.முருகனின் ஏழு குறுநாவல்கள் ஒற்றைத் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மையாக, 1990களின் சகாப்தத்தை தமிழ் குறுநாவல்களின் பொற்காலமாக எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ம.வே.சிவகுமார், சுரேஷ் குமார இந்திரஜித், விமலாதித்த மாமல்லன் எனப் பலரும் எழுதுகோல் ஏந்தலில் இருந்த கட்டம். இவர்களில், சுஜாதாவுக்கு அடுத்து, முதலாவதாகக் கணினிக்கு வந்தவர் அனேகமாக முருகனாக இருக்கக் கூடும். கணினிப் பொறியாளராக இருந்த முருகன், சுஜாதாவை அடியொற்றுகிறார் என்னும் பேச்சு இருந்தது.
கதைகள் தரும் சுவாரசியமும், சம்பவங்களின் போது, சுற்றுப்புறத்தை மையமாக வைத்து வீசும் சில வாக்கியங்கள் மூலமாகவும் அப்படிப் பலரும் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதி நிச்சயமாகவும் சுஜாதாவின் வாக்கு வங்கிக்கும் (சொல் வங்கி என்பதை வாக்கு வங்கி என எழுதிவிட்டேன்), முருகனின் வார்த்தை வங்கிக்கும் வித்தியாசம் உண்டு.
கதைகள் ஏழில் முதற்கதையான ‘விஷம்’ லேசாக கேயாஸ் தியரியின் வாசம் வீசக் கூடியது. ‘பகல் பத்து ராப்பத்து’ கதையில் மாடலிங் பெண் சென்னை சினிமாக்காரியாக வர நினைக்கிறவள் இப்படி யோசிக்கிறாள்: ‘மெட்ராசில் குடியேறி இரண்டு தமிழ்ப்படம் செய்யலாம். உடம்பு ஊதிப் போனாலும் பரவாயில்லை. பிடித்துப் போனால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள். ப்ரீத்திக்குக் கோவில் வேண்டாம். சொந்த பிளாட் போதும்’. (பக். 141) ஒரே எழுத்து நடையைக் கட்டிக் கொண்டிராமல், கதை மாந்தரையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் ஒட்டிப் புழங்குகிற நடை, முருகனுக்கு. இதில், வாழும் இடத்தை ஒட்டி மராட்டி, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் எதுவானாலும் புரண்டு முயங்கும் உரையாடல் முருகனது அறிவும் சமர்த்தும் சாமர்த்தியமுமாகும்.
‘மனை’ கதையின் பக்கம், 56,57களில், ‘நானாக்கும் இன்று…’‘நீ போடி தெம்மாடி… இலையத் தொடாதே…’‘நீ என்ன மோகினி என்று நினைப்போ?’ எனத் தொடங்கும் உரையாடல் ஆகட்டும் அல்லது, ‘ஆகக்கூடி இந்தக் கல்யாணி சொர்க்கம் போக மற்றவர்களை விட சாத்தியம் அதிகம். புருஷன் சாப்பிட்ட இலையிலேயே சாப்பிடுகிற பெண்களுக்கு சுவர்க்கத்தில் தனியாக ஒரு வாயில் திறந்து வைத்திருக்கிறது. உள்ளே போகிற வழி எல்லாம் வாழையிலை விரித்து வைத்திருக்கிறது’ என விரியும் சித்திரமாகட்டும், மற்ற கதைகளிலிருந்து மனையை பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
தனது பின்னாளைய நாவல்களுக்கு, முன் உந்துதல் தந்தவற்றில் ஒன்றாக ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ கதையை முருகனே குறிப்பிடுகிறார். அந்தக் கதையைப் படித்ததும் டீச்சரை நினைத்து ரொம்பத் துக்கமாக இருந்தது. சரளமும் சரக்கும் சாரமும் மிகுந்த ‘முருகனின் கதையைப் படித்து முடிக்காத தமிழ்ச் சமூகம்’ இருந்தாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். ஆகவே இரா.முருகன் பாணியிலேயே இப்படிச் சொல்லி முடிக்க வேண்டியிருக்கிறது.
‘புத்தகம் படிப்பது தமிழ் நாட்டின் பிரதானத் தொழில்களில் ஒன்று அல்ல’.
தொடர்புக்கு: sivakannivadi@gmail.com
– க.சீ.சிவகுமார்