ஒரு சரித்திர நாவல் எழுதும் ஆசையில், 17ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரையிலான தகவல்களைத் திரட்டி வைத்திருந்தார் ப.சிவனடி. திரட்டிய தகவல்களைத் தன் நண்பரான கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியிடம் காட்டியபோது, ‘எத்தனையோ பேர் சரித்திர நாவல் எழுதுகிறார்கள். நீங்கள் ஆதாரப்பூர்வமான தகவல்களை வைத்திருப்பதால், சரித்திரக் களஞ்சியமாக இவைகளை எழுதக் கூடாதா’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த ஒரு கேள்வியில் இருந்து, 4,600 பக்கங்கள், 15 தொகுதிகள், 140 ஆண்டுகால வரலாறு பிறந்திருக்கும் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ப.சிவனடி அதை நடத்திக் காட்டியிருக்கிறார். நாவல் எழுதும் யோசனையை அப்படியே விட்டுவிட்டு, சிவனடி எழுதிய நூலே இந்திய சரித்திரக் களஞ்சியம். தமிழர்களின் ஆகச் சிறந்த அடையாளம், பெருமிதம் என்று சொன்னால் மிகையல்ல.
ப.சிவனடி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் கப்பற்படையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். பின் விருதுநகரிலேயே ஒரு தனியார் கல்லூரியில் கணக்கராக சிறிது நாட்கள் வேலை பார்த்தவர். ‘நேபன்’ என்னும் பன்னாட்டுச் செய்தி நிறுவனத்தில், செய்தி ஆசிரியராக எட்டு ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவமே தன் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார்.
கப்பல் பயணத்திலும் செய்தி நிறுவனத்திலும் வேலை செய்த காலங்களில், அவர் சேகரித்த நூல்கள், பிற்காலத்தில் அவருக்கு உலக வரலாற்றை எழுத உதவி செய்யும் என்பதை அவர் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கல்வித் தகுதி, வேலை, வயது, பொருளாதாரம் என்று சாதனைகளுக்குப் பின்புலமாகச் சொல்லப்படும் எல்லாத் தகுதிகளையும் புறந்தள்ளிய ப.சிவனடி, தன் 60வது வயதில் தான் எழுதத் தொடங்கியிருக்கிறார்.
ஆண்டுக்கு ஒரு புத்தகம், அந்தப் புத்தகத்தில் பத்தாண்டு களுக்கான தமிழக, இந்திய, உலக வரலாறு என்று பிரித்துக் கொண்டு, தகவல்களைவரிசைப்படுத்தி எழுதியுள்ளார். இவ்வாறு இவர் கி.பி.1700 தொடங்கி, 1840 வரையிலான 140 ஆண்டுகால வரலாற்றைச் சுவைபட, விரிவாக எழுதியுள்ளார்.
–
மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.,