மாட்டுக் கறிக்குத் தடை, பக்ரீத்துக்கு விடுமுறை ரத்து, பகவத் கீதையை தேசிய நூலாக்குதல் போன்ற மத்திய அரசின் திணிப்புகளைக் கண்டிக்கும் வகையில், ‘முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம்; மனு தர்மத் தந்திரத்தை முறியடிப்போம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஆற்றிய உரைகளை ஒட்டி, 25 தலைப்புகளில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஒவ்வொரு காலச் சூழலிலும் சமூக இயக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அரசும் அது சார்ந்த சமயமுமே இருந்துள்ளன. சுரண்டலை மறைப்பதற்கான ஓர் உத்தியாகப் பண்பாட்டு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன’ (பக்.13) என்ற விமர்சனம் யதார்த்தமாக இருந்தாலும், ‘குண்டலகேசி சமணத்தைக் கண்டிக்கும் பவுத்த நூல்’ (பக்.23), ‘காஞ்சி காமாட்சிஅம்மன் கோவில் ஆரம்பத்தில் பவுத்த கோவிலாக இருந்தது (பக்.24), ‘திருவாரூர் குளம், சமணர்களின் குடியிருப்புகளை அழித்து அமைக்கப்பட்டதே (பக்.25)’ என்பன போன்ற வாதங்கள், மனுவை எதிர்க்கின்றனவா அல்லது பிற சமயச் சார்பா என்பது விளங்கவில்லை.
இந்த நூலில், மாறுபட்டு வரும் அரசியல் சூழலில் இடதுசாரி அரசியல் இயக்கங்கள் ஏன் இடறி விழுகின்றன என்பதையும் விளக்கியிருந்தால் முழுமையாக இருக்கும்.
பின்னலூரான்