கடந்த, 1902, ஜூலை 5ல், சென்னை வேப்பேரியில் பிறந்த அ.கி.பரந்தாமனார், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில், 17 ஆண்டுகள், தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். அவர் எழுதிய வரலாற்று நூல்களில், ‘மதுரை நாயக்கர் வரலாறு, திருமலை நாயக்கர் வரலாறு’ ஆகிய இரண்டும் மிகப் புகழ் பெற்றவை. அவற்றில், மதுரை நாயக்கர் வரலாறு, 1981ம் ஆண்டு, பல்வேறு திருத்தங்களுடன், நான்காம் பதிப்பாக வெளிவந்தது. அதன் ஐந்தாம் பதிப்பை, தற்போது அல்லி நிலையம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் சத்தியநாத ஐயர், மு.கோவிந்தசாமி ஐயர், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, ஏ.கிருஷ்ணசாமிப் பிள்ளை ஆகியோரின் நூல்களை அடியொற்றி, இந்த நூலை தந்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார், நூலாசிரியர். விஜயநகரப் பேரரசின் தோற்றம், கிருஷ்ண தேவராயரின் ஆட்சிச் சிறப்பு, மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியை இந்த நூல் விவரிக்கிறது. எளிய நடையில், தங்கு தடையின்றி, அன்றைய அரசியல் நிலைப்பாடுகள், நெஞ்சை உலுக்கும் போர்கள் என, ஒரு நாவலுக்கே உரிய சுவாரசியத்துடன் செல்கிறது, இந்த நூல்.
திருமலை நாயக்கர் மற்றும் மங்கம்மாள் மரணம் பற்றி, இன்றும் மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் பல்வேறு கட்டுக்கதைகள் உலவும் நிலையில், திருமலை, தமது, 72 வயதில் இயற்கை மரணம் அடைந்தார் என்று அக்கட்டுக்கதைகளுக்கு இந்த நூல் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. மேலும், மங்கம்மாள், தம் பேரன் விஜயரங்க சொக்கநாதனால் சிறை வைக்கப்பட்டு இறந்தார் என்பதையும் மறுத்துள்ளது.
தன் முற்றுகைக்கு உட்பட்ட கண்ணுார் குப்பத்தில் உள்ள எதிரிநாட்டு வீரர்கள், உணவு பற்றாக்குறையால், 14 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தந்தை வேண்டிய போது, அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டான், ஹொய்சாள மன்னன் மூன்றாம் வல்லாளன். ஆனால், மதுரை சுல்தான் கியாஸ் உத் தீன் தம்கானி, ஒப்பந்தத்தை மீறி, திடீரென பெரும்படையுடன் வந்து, மூன்றாம் வல்லாளனை கைது செய்து, உயிருடன் தோலை உரித்து, அந்தத் தோலில், வைக்கோல் நிரப்பி, மதுரை நகர மதிலில் தொங்க விட்டு மகிழ்ந்தான் (பக்.35).
ப.லட்சுமி