அமானுஷ்யம், நாட்டுப்புறக் கதை, காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று பல்சுவைக் கதைகள், இந்தத் தொகுப்பில் உள்ளன. சிறப்பாக முதலிடம் பெறும் கதை, ‘ஒற்றை மார்பு!’ மார்பகப் புற்றுநோயால், ஒரு மார்பை இழந்த கதாநாயகி, வாழ்க்கையைப் புத்துணர்ச்சி உள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக, ஒரு ஏழை மாணவியிடம் அன்பு காட்ட துவங்குவதை உருக்கமாகச் சொல்கிறார் கதாசிரியர். முதல் கதையான, ‘சிவப்பு ராத்திரிகள்’ ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற உற்சாகத்தைத் தருகிறது. ‘காதல் செய்ய விரும்பு’ முக்கோணக் காதல் கதை. காதலுக்காக தியாகங்களைச் செய்யும் மாந்தர்களைச் சொல்லும் கதை.
திருநங்கையர், தங்கள் பாலினத்தை அறிந்துகொள்ளும் தருணம் மிகவும் சிக்கலானது. அந்த நேரத்தில், பெற்றோருக்கு மிகவும் பொறுமையும், தெளிவும் அவசியம் என்பதைச் சொல்லும் நிஜக்கதை, ‘வீட்டில் ராணி வெளியே ரமணி!’
‘இதயத்தைத் தொலைத்து விட்டேன்’ போன்ற கதைகள், மிக மிகச் சாதாரணமானவை. நன்றாகக் கதை பின்னத் தெரிந்த எஸ்.கே.முருகன், புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும் பயணித்த பாதையில் சென்றால் சிகரங்களைத் தொடலாம்.
எஸ்.குரு