சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை, ஒரு கொலை வழக்கு மற்றும் நரிவேட்டையின் பின்னணியில் சொல்கிறார் விநாயக முருகன்.
நாவல் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும், பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு, நாவலில் இருக்கத்தான் செய்கிறது. சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பில், ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன. நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்குப் பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம், உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் விட, நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பாத்திர உருவாக்கத்தில்தான், விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பேட்டர்ஸனின் பாத்திரம்.
ஒரு விளையாட்டாகத் தொடங்கி, நரிவேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு, உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது, அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. விநாயக முருகன் வருணிக்கும் நரிவேட்டையின் நுணுக்கங்கள், நாவலை மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது. ‘வலம்’ நாவல் முழுக்க, விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல; ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை ‘வலம்’ உணர வைக்கிறது.
தொடர்புக்கு: iramurugavel@gmail.com
– இரா. முருகவேள்