தெரசாவின் தாயகம் அல்பேனியா. இருப்பினும் அவர், 1948ம் ஆண்டிலேயே இந்தியப் பிரஜை ஆகி விட்டார். தெரசாவும் ஒருமுறை, ‘ரத்த சம்பந்தத்தால் நான் அல்பேனியன். மதநம்பிக்கையில் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி. மற்றபடி எப்போதும் நான் இந்தியப் பெண்மணி’ என்று கூறியிருக்கிறார்.
மற்ற இளம்பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பருவத் தொல்லைகள் எதனையும் தெரசா அனுபவித்ததில்லை. அது, இயற்கை அவருக்குத் தந்த கொடை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, துறவறம் பூண்டு ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசையாகவும், லட்சியமாகவும் இருந்தது. முதலில், தொண்டு செய்ய, கன்னியாஸ்திரியாக ஆவதற்கே, அவர் பட்ட அல்லல்கள் அநேகம்.
அவர் தன் தொண்டுப் பயணத்தின் போது பட்ட அவமானங்கள், துயரங்கள், சவால்கள் இவற்றை நூலாசிரியர் விவரிக்கும் போது, இவ்வளவையும் சகித்துக் கொண்டு, இப்படியும் தொண்டாற்ற வேண்டுமா என்றே நமக்குத் தோன்றும். அவரது வரலாற்றை தனக்கே உரிய சுவாரசிய மொழிநடையில், நூலாசிரியர் அழகுற எழுதியுள்ளார்.
மயிலை சிவா