தென்னாப்ரிக்காவில், காந்தி இருந்த காலத்தில் இருந்து, அவரோடு இணைந்து பணியாற்றிய தமிழர்கள் ஏராளம். அதுபோலவே, காந்திக்காக பணியாற்றிய தமிழர்களும் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் ஏ.கே. செட்டியார். காந்தி குறித்த ஆவணப்படத்திற்காக உலகம் முழுவதும் சுற்றியவர்.
அவர், தென்னாப்ரிக்காவில் இந்தியர்கள் சந்தித்த பிரச்னைகள், காந்தி நடத்திய போராட்டம் பற்றி, சுதேசமித்திரனில் வெளியான தகவல்கள், கடிதங்களை தொகுத்து ‘புண்ணியவான் காந்தி’ என்ற பெயரில், 1969ம் ஆண்டு, வெளியிட்டார். தற்போது, அந்த நூல் மீண்டும் வெளியாகி உள்ளது. இந்த நூல், காந்தி குறித்த, தமிழ் ஆவணங்களில் முக்கியமான ஒன்று. பிரிட்டிஷ் அரசின் காலனியாக இருந்த இந்தியா, ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட, சுரண்டப்பட, பஞ்சமும், நோயும் தலைவிரித்தாடின. ஏதேனும் விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தில், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூலித்தொழிலாளர்களாக சென்ற இந்தியர்கள் ஏராளம். புலம்பெயர்ந்து சென்றோர், வசதியுடன் வாழ்வதாக உள்ளூர் மக்கள் எண்ணினார்கள். ஆனால், அவர்கள் சந்தித்த கொடூரமான வாழ்வியல் சூழலை, சுதேசமித்திரனின் கடிதங்கள் மற்றும் தலையங்கங்கள், விரிவாகவும் விவரமாகவும் பதிவு செய்துள்ளன.
‘எமிகிரேஷன் ஏஜென்டுகளும், கண்காணிகளும், இமயமலையில் இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் ஊர் ஊராக சென்று கூலி ஆள் சேர்க்க, எமிகிரேஷன் டிப்போக்களை பயன்படுத்துகிறார்கள். தென்னாப்ரிக்காவுக்கு பிழைக்க போனவர்கள் எல்லாம் குபேரராகி விட்டார்கள் என்ற எண்ணம் தான்’ புலம்பெயர் இந்தியர்களின் நிலையை பற்றிய பதிவு இது.
தென்னாப்ரிக்காவில் போராடிய தம்பி நாயுடுவை பற்றிய பதிவுகள் மிக முக்கியமானவை. குடியேறிய நாட்டின் விடுதலைக்காக, அவர் செய்த தியாகங்கள் அளப்பரியவை. தமிழகம் அறிந்திராத இதுபோன்ற பலரை குறித்த தகவல்கள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தென்னாப்ரிக்க விடுதலையில், தமிழர்களின் பங்கு குறித்து தெரிந்து கொள்ள உதவும் வரலாற்று ஆவணம் இந்த நூல்.
தென்னாப்பிரிக்காவில், எந்த இந்தியர் வீட்டில் பார்த்தாலும் காந்தியடிகள் படம் தான். ‘காந்தி’ என்பது மந்திரச் சொல். அந்த வார்த்தையை எந்த இந்தியரிடமாவது உச்சரித்தால், அவர் முகத்தில் பிரகாசத்தைக் காணலாம். (பக்: 80–81)
ஜே.பி.,