சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது.
கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியது; இந்தியாவில் உருவான தியான முறை சீனாவில் வளர்ந்து, நிலைபெற்றது; வட்டார கதையாடல்கள் மூலம் உருவான மரபுவழித்தடங்களை இன்று வரை பின்தொடர்வது என, சீனா குறித்த அத்தனை தகவல்களையும் சுவாரசியமாகவும், நுணுக்கமாகவும், எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
மேலும், ‘அடங்கு, உன்னை கடைசியில் வை, கீழ்படி’ என்பன போன்ற மதக் கோட்பாடுகள், எப்படி சீனப் பெண்களை அடக்கி ஒடுக்கின என்பதை, ‘மரணித்த பாதங்கள், பெண்மொழி, நவீன சீனத்தில் பெண்ணின் நிலை’ ஆகிய கட்டுரைகளில் ஆழமாக
குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, சித்திர எழுத்தில் கூட பெண்கள் தங்களின் ஆற்றாமையையும், மன வேதனைகளையும் சக பெண்களிடம் பகிர்ந்து கொள்ள, ஆண்களுக்கு புரியாதபடி, பெண்களுக்கென தனித்த மொழியான, ‘நுஷூ’ மொழியை உருவாக்கியிருப்பது, அவர்கள்அடைந்த பெருத்த வலிகளை உணர வைக்கிறது.
கடுமையான சட்டங்கள் மற்றும் விதிகளால், அனுமதிக்கப்பட்ட ஊருக்குள்ளே வாழுதல்; மீறினால் கடும் தண்டனை. இடப்பெயர்வுகளையும் அதனால் அதிகரிக்கும் குற்றச் செயல்களையும், சமாளிப்பதே, ‘ஹூகோவ்’ முறையின் இன்றைய சவால்கள். ‘தி லாஸ்ட் டிரெயின்’ திரைப்படம், நகரத்தை நோக்கிய நகர்வில் சிக்குண்டிருக்கும் சீனர்களின் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும். அதில், இளவயது பெண் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தான், நவீன சீன முகம்.
பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க சீனப் புத்தாண்டுடன், மூதாதையர் வழிபாட்டையும் சிறப்பாக காட்டியிருக்கிறார் நூலாசிரியர். ‘ஒன்று கூடல்’ விருந்துக்கு ஏன் சீனர்கள் முக்கியத்துவம் தருகின்றனர் என்பது தான், கலாசார வேரின் பிடியில் இருக்கும் சீன முகம். அதில் அசைந்தாடுகிறது நறுமண பூக்களின் ஒளி.
கண்மணி