இசையரசி எம்.எஸ்.,ஸின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தாலும் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியாகிஇருக்கும் இந்த நூல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. எம்.எஸ்.,ஸின் வாழ்க்கையின் உன்னத தருணங்களை மிகுந்த உணர்ச்சிகரமான நடையில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். எம்.எஸ்., ஆறு வயது குழந்தையாக இருந்தபோதே, ‘ஆனந்தாரா’ என்ற மராட்டியப் பாடல் அருமையாக நம் முன்னால் பாடியதிலிருந்து, அவரது வாழ்நாள் இறுதி வரை எதிர்பாராத பல சம்பவங்களே அவரது வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள உதவியதை ஒரு கனராகத்தை விஸ்தாரமாக ஆலாபனை செய்வது போல் புத்தகத்தில் வடித்திருக்கிறார்.
சென்னை மியூசிக் அகாடமியில் பாடிய முதல் பாடகி அவர் தான். அதே அகாடமியில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாட வேண்டிய கச்சேரிக்கு அவரால் வர முடியாததால், அதை இட்டு நிரப்ப மேடையேறிப் பாடி, கர்நாடக இசை ஜாம்பவான்களான செம்பை, டைகர் (வரதாச்சாரியார்) போன்றவர்களின் மனமுவந்த பாராட்டுக்களைப் பெற்றவர். இயக்குனர் கே.சுப்ரமணியம் மூலமாக சினிமா உலகில் பிரவேசித்தது, ஏற்கனவே மணமானவராக இருந்தபோதிலும் தாயின் எதிர்ப்பையும் மீறி சதாசிவத்தை மணந்தது, ஐ.நா., சபையில் காஞ்சி முனிவர் ஸ்பெஷலாய் இயற்றித் தந்த, ‘மைத்திரம் பஜ’ பாடலைப் பாடியது, மகாத்மா காந்தியே விரும்பிக் கேட்டதால் மீரா பஜன் பாடலைப் பாடியது, ‘பாரத ரத்னா’ விருது பெற்றது, 2008ம் ஆண்டு மியூசிக் அகாடமியின், ‘பிளாட்டினம் ஜூப்ளி’ விருதை, இடுப்பு எலும்பு முறிவால் சிகிச்சையில் இருந்த, எம்.எஸ்., வீட்டிற்கே சென்று ஜனாதிபதி அப்துல் கலாம் தந்தது என வரலாற்று தகவல்கள் உள்ளன.
ஆனால், இசைக் குயிலின் இறுதி நாட்கள் துன்பகரமானவை. நீரிழிவு நோயாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட்ட அவரை மறதி நோயும் தன் பங்கிற்கு தாங்கியது. ஏறத்தாழ, 2,000 பாடல்களுக்கு மேல் எந்தப் பாடலையும், எந்த விதமான குறிப்பையும் பார்க்காமல் தன் நினைவிலிருந்தே பாடிய அவருக்கு இந்த நோய் வந்தது இசை ரசிகர்களின் துரதிருஷ்டம் தான்.
அத்தோடு வானொலியிலோ, ‘டிவி’யிலோ, கர்நாடக இசை பாடப்பட்டால் அதைக் கேட்கப் பிடிக்காமல், ‘நிறுத்து அதை’ என்று கூக்குரலிடுவார் என்று படிக்கும்போது நம் இதயம் கனக்கிறது. மோகன ராகமாகவே விளங்கி வந்த அவர் வாழ்வு இப்படி முகாரியில் முடிவுறுவது பெரும் வேதனை அளிக்கும் விஷயம். நூலை வெளியிட்டிருக்கும் பதிப்பகத்தார் பாராட்டப்பட வேண்டியவர். நல்ல வழு வழுத்தாளில் காலம் காலமாய் வைத்துப் பாதுகாக்கும்
வரிசையில் உறுதியான பைண்டிங்கில் வெளியிட்டிருக்கின்றனர்.
புகைப்படக் கலைஞர் யோகாவின் ஜீவன் ததும்பும் வண்ணப்படங்களும், கறுப்பு – வெள்ளைப் படங்களும் நூலுக்குத் தனி மெருகூட்டுகின்றன. நூலின் பின் இணைப்பாக, எம்.எஸ்.,ஸோடு நெருங்கிப் பழகிய சில வி.ஐ.பி.,க்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. கர்நாடக இசை ரசிகர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய குறையொன்றும் இல்லாத இசைக் கலைஞரை நம் மனதில் பதிய வைக்க உதவும் நூலாகும்
– மயிலை கேசி