திராவிட மொழி இயலின் தந்தை ராபர்ட் கால்டுவெல். 202 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்து, கிறிஸ்தவ சமயப் பணியாளராக, 1938ல் சென்னை வந்தார். மூன்று ஆண்டுகளில் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். வின் சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலான தமிழ் அறிஞருடன் இணைந்தார். 400 மைல் தொலைவு திருநெல்வேலிக்கு, சென்னையில்இருந்து நடந்தே சென்றார். தமிழ் மக்களை நேரில் கண்டு, அவரது மொழி, கலை, பண்பாடுகளை ஆய்ந்து அறிந்து வியந்தார். 1841ல் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இடையன்குடியில் தங்கி, 50 ஆண்டுகள் அரிய தமிழ்ப் பணிகள் செய்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிக் குடும்பங்கள் திராவிட மொழிக் குடும்பம் என்றும், இதன் தாய், தமிழ் என்றும்; ஆய்வில் நிறுவனார். ஒப்பிலக்கணம் எழுதினார். ஈமத்தாழிகள், கட்டடங்கள், நாணயங்களை ஆதாரமாக வைத்து தமிழின் பழமை வரலாற்றை புதுமையுடன் எழுதினார்.
சிதம்பரம் நடராசர் கோவிலை தரிசித்து, தரங்கம்பாடியில் ஆய்வு செய்து, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் அமர்ந்து ஆய்வு நூல்கள் எழுதினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் நடந்த கால்டுவெல் கருத்தரங்கில் படித்த, 14 கட்டுரைகளை இரா.காமராசு சிறப்பாக நூலாக்கித் தந்துள்ளார்.
பேராசிரியர் நாச்சிமுத்து, ‘திராவிடம்’ என்ற சொல்லை. வழக்கத்தில் கொண்டு வந்தும், மொழியின் வேர்களைத் தேடியும், ஒப்பிலக்கணம் எழுதியும் கால்டுவெல் தமிழில் முத்திரை பதித்துள்ளார் என்கிறார்.
கவிஞர் சிற்பி மேலை நாடுகளில் இருந்து வந்து தமிழுக்குப் பெருமை சேர்த்த வீரமாமுனிவர், எல்லீஸ் ஜி.யு.போப், சாமுவேல் பிஸ்க்கிரீனுடன் கால்டுவெல்லையும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். கிறிஸ்தவ சமயப் பணியோடு, சமுதாய சீர்த்திருத்தம், மொழிச் சீர்த்திருத்தம், சமயப் பரவலையும் கால்டுவெல் செய்தார் என்று ஜெ.கிங்ஸ்லி கூறுகிறார்.
திருநெல்வேலி பகுதியில் தனி மனித மத மாற்றம், குழும மத மாற்றம் அதிகம் ஏன் நிகழ்ந்தது என்பதும் (பக். 65) ஆய்வு செய்யப்பட்டுள்ளது வரலாற்றை படம் பிடிக்கிறது. கால்டுவெல்லால் மொழி இயல் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பாளையக்காரர்களை கால்டுவெல் எவ்வாறு பார்த்து ஆய்வு செய்துள்ளார் என்பதும் சிறந்த ஆய்வுரையாக வந்துள்ளது.
அயல்நாடான அயர்லாந்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ் கற்று அதில் காதல் உற்று, ஆழம் பெற்று, புதிய பல அடைவுகளைத் தமிழுக்குத் தந்த கால்டுவெல் தொண்டை, சாகித்ய அகாடமியின் இந்த நூல் சான்றாக நிறுவி உள்ளது.
முனைவர் மா.கி.ரமணன்