பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட, இந்நூலாசிரியர் சிறந்த தமிழ் அறிஞர். இவர் கம்பர் குறித்தும், வைணவம் குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 11 கட்டுரைகள் உள்ளன. ஒரு குரங்கை, கம்பன் கண்ட மனிதனாக கூறுவதும் (பக். 3), கண்ணனைச் சரயு ஆற்று ஓட்டத்தில் காண வைப்பதும் (பக். 12), நம்மாழ்வார் பிரபந்தங்களை தழுவிக் கொள்ளும் கம்பரின் பாடல்களை விளக்குவதும் (பக். 23), சிவபெருமானின் பெருமைகளை விளக்கும், கம்பரின் பாடல்களைக் குறிப்பிடுவதும் (பக். 29), திருப்பாவையின் சில பாடல்களை கம்பர் பாடலுடன் ஒப்பிடுவதும் (பக். 35).
கருடனைக் குறித்து, கம்பர் விளக்கும் சில பாடல்களும் (பக். 44) கம்பரின் முழுத் திறமையையும் விளக்குவது, யுத்த காண்டம் என்று விளக்குவதும் (பக். 77), திருமால் திருநெறியை வேதகாலம் முதல் விளக்குவதும் (பக். 79) கம்பர் வைணவரே என்று, அவர் பாடல் துணை கொண்டே விவரிப்பதும் (பக். 97), வள்ளுவர் கூறும் வைணவக் கருத்துக்களை விவரிப்பதும் (பக். 104) நூலாசிரியரின் ஆழ்ந்த புலமையை தெரிவிக்கின்றன. நூலாசிரியரின் இப்பணி, போற்றிப் பாராட்டப்பட வேண்டியதாகும்.
டாக்டர் கலியன்சம்பத்து