தர்(ரு)மத்திற்கு விளக்கம். தர்மத்தை விளக்குவதற்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தர்மத்தைப் பற்றிச் சாதாரண மக்களுக்குத் தெளிவாக விளக்கியுள்ளார் சுகி.சிவம். குட்டிகளுக்காக இரை தேடச் செல்லும் மானையும், சிங்கத்தையும் காட்டி தர்மத்தை எளிதில் உணர்த்துகிறார். ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்னும் புறநானூற்றுப் பாடல் சொல்லும் அறச் சிந்தனையைப் பொருத்திக் காட்டுகிறார். தர்மம் என்னும் சொல்லுக்கு இலக்கணச் சொல் விளக்கம் தருகிறார்.
பேசுவது போல் எழுதும் நடை சுகி.சிவத்திற்கு எளிதில் வாய்த்திருக்கிறது. எனவே, அந்தச் சிக்கலான பொருளையும் இவரால் எளிதாக விளக்கி எழுதிட முடியும் என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. 10 வகைத் தர்மம், 32 வகை அறம் என்று அறத்தின் பட்டியலை நீட்டிக் கொண்டு போய் விளக்குகிறார். அவ்வாறு விளக்கும்போதே அறம் வளர்த்த நாயகியையும், அவருக்கு வழங்கப்படும் தர்ம வர்த்திநீ என்னும் வடமொழிப் பெயரையும் விளக்குகிறார்.
திருக்குறள், புறநானூறு, பட்டினப்பாலை, பெரியபுராணம், பாரதி பாடல் ஆகிய இலக்கிய ஆதாரங்களுடன், அரசியல் வரலாற்றையும் கலந்து எழுதும் இவரது எழுத்து நடையானது, ஓரளவு இலக்கிய ஆர்வம் கொண்டவர்களை, இலக்கியத்தில் ஆழ்ந்துவிடச் செய்யும். மொத்தத்தில், இந்த நூல் எழுத்து எண்ணிப் படிப்பவர்களின் எண்ணத்தையும் இழுத்துப் பிடிக்கும் வல்லமை கொண்டது.
முகிலை ராசபாண்டியன்