பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்! பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மறு பதிப்பு. பதிப்புரை எழுதும் கலையில் ஒரு புதுமையை இந்தப் பதிப்பின் முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வியாசரின் பாஞ்சாலி சபதத்துடன் ஒப்பிட்டு மாறுபடும் இடங்களையும், பாரதியின் கவிதை வீரியத்தையும் இப்பதிப்பு வெளிப்படுத்துகிறது. வியாச பாரதத்தில் பாஞ்சாலி சபதம் பகுதி இடம் பெறும் பகுதியின் தமிழ் உரை நடையை பின்னிணைப்பாக தந்து, தன் பதிப்புரையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திஉள்ளார் பழ.அதியமான்.
கடந்த, 1913ல் ஞானபாநுவில் வெளிவந்த பாஞ்சாலி சபதத்தின் புத்தக மதிப்புரை, பாரதி தன் பாஞ்சாலி சபதத்தின் முதல் பகுதிக்கு எழுதிய, குறிப்புரை, முகவுரை (1912) ஆகியவற்றுடன் பாரதிக்கு பின் வெளியான பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பகுதிக்கு பதிப்பகத்தார் எழுதிய முன்னுரையுடன் (1924) வெளிவந்துள்ள இந்த நூல் பாரதி காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். பாரதியின் உரைநடை, பாரதத்தின் வசன நடை, பழ.அதியமானின் உரைநடை என, முப்பரிமாண உரைநடையையும் வழங்கும் ஒரு காவிய நூல் இது.
முகிலை இராசபாண்டியன்