‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவது அரசின் கடமை என வலியுறுத்தி, பூமி எங்கும் போராடும், போராடுகின்ற போராடத் துணிகிற இளைஞர்களுக்கு இந்நூல் என்ற சமர்ப்பணத்துடன் துவங்குகிறது இந்த நாவல்.
மதங்கள், ஜாதிகள் பெயரால் நாளும் நடந்தேறும் கவுரவக் கொலைகள், தண்ணீரை அநியாய விலைக்கு விற்று மக்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், யார் வேண்டுமானாலும் கூவி விற்கக்கூடிய அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்ட கல்வி, மதுவின் பிடியிலும் போதையிலும் தள்ளாடும் நாடு, கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா விற்பனை, லஞ்சம், ஊழல் ஆகிய எல்லாம் இதில் உள்ளன.
ஐ.டி., இளைஞர்களின் கனவுகள் எல்லாம், அமெரிக்காவில் குடியேறுவதாக இருக்கக்கூடிய சூழலில், இன்றைய பல இளைஞர்களுக்கும், சுரண்டலற்ற சமூகம்; ஊழலற்ற ஆட்சி ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய வெறி இருப்பதையும், தன் மகிழன், சித்தார்த், இளவேனில் போன்ற பாத்திரங்களின் படைப்பாய் நிறுவுகிறார்.
அரசியல், இயக்கங்கள் ஆகியவை குறித்துப் பரந்த அறிவும், அழகும், பணத்திற்கு அடி பணியாத வாக்குவாதமும் நிறைந்த நாவலின் நாயகி இளவேனில், வாசகர்கள் மனதுக்கு நிறைவு தரும் பாத்திரம். குடிகாரக் கணவன் அந்தக் குடியாலேயே இறந்து போனதை, அவருடன் வாழ்ந்த வாழ்வை, ஒரு கெட்ட கனவாகக் கருதி, மகிழனைக் காதலிக்கும் மல்லிகாவின் பாத்திரமும் ஒரு யதார்த்தமான படைப்பு தான். ஏன், தெருவில் தள்ளுவண்டியில் தக்காளி விற்கும் பழனி, ஒன்றுமே அறியாது இருந்து, ஐ.டி., இளைஞர்களுடன் பழகி, புத்தகம் படிக்கும் பழக்கம் வந்து, தீவிர அரசியல் பேசும் பாத்திரமாக மாறுவதும் இயல்பான ஒரு மாற்றம் தான்.
அரசியல் ஒரு சாக்கடை தான். அதற்காக அதை விட்டு விலகி ஓடாமல், அதைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என, இளைஞர்கள் நிச்சயம் முன் வரவேண்டும், வருவர் என்பதை வலியுறுத்த, தன் நாவலுக்கு, ‘வருகிறார்கள்’ என, தலைப்பிட்டிருக்கிறார் போலும்!
if winter comes can shring be far behind? என்ற கவிஞன் ஷெல்லியின் வைர வரிகளை நினைவூட்டுவது, இந்த நம்பிக்கை நாவல்.
மயிலை கே.சி.,