நூலாசிரியர் எழிலழகன் செய்தித்துறை அனுபவம் மிக்கவர் என்பதால், தமிழக மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டிய தகவல்களை, இந்த நூலில் சிறப்பாக தொகுத்திருக்கிறார். நாட்டுப்பற்றுமிக்க கருத்துக்கள், வரலாறு பேசும் தகவல் இதில் அடக்கம். ஆகவே, முதல் நூல் என்ற கருத்தை விட, கருத்துக்கள் கோர்வையாக உள்ளன.
தமிழக அரசு பல்வேறு தலைவர்களின் நினைவகங்களை உருவாக்கிய போதும், அதன் தொடர்புடைய, தமிழக தலைவர்களை வரலாற்றுப் பார்வையில், இவர் பார்த்து சேகரித்த தகவல்கள் இதில் உள்ளன.
காந்தியடிகள் துவங்கி, கோபால் நாயக்கர், செய்குத் தம்பி பாவலர், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என, 50க்கும் மேற்பட்ட நல்லோர் மேற்கொண்ட தியாக வேள்விகள் இதில் அடக்கம்.
கைத்தறித் தொழில் நசியாமல், நவீன கைத்தறி நெசவை கொண்டு வந்த பிட்டி தியாகராயர், துறவி போல வாழ்ந்த ஜீவா, ‘பிழைப்பு நடத்த வந்த வியாபாரி எனக்கு எப்படி சம்மன் அழைப்பது?’ என, பிரிட்டிஷாரை கேள்வி கேட்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, ‘குற்றியலுகரம்’ குறித்து, நயமாக விளக்கிய பரிதிமாற் கலைஞர் என, பல சிறப்புகளை ஆசிரியர் தொகுத்த விதம் அவரது அரிய முயற்சிக்கு அடையாளமாக அணிசேர்க்கிறது. வள்ளல் அதியமான் கோட்டம் அமைவிடம் உட்பட, பல்வேறு அமைவிடங்களையும் நூலில், தெளிவாக தரப்பட்டிருக்கின்றன.
நூலகங்களிலும், போட்டி தேர்வுகள் எழுத முற்படுவோர்களுக்கும், இந்த நூல் மிகவும் பயன்படும்.