கணையாழி இதழ், படைப்பாளர், திறனாய்வாளர், சிறந்த வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற ஒன்று. கலை, இலக்கியம், சமுதாயம், வாழ்க்கை, ஓரளவு அரசியல் எல்லாம் கலந்த கட்டுரைகள் கணையாழியில், 1995 முதல், 2000 வரை வந்தவை தொகுக்கப்பட்டு ஒரு நூலாக கவிதா பப்ளிகேஷனால் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்துலகின் பெரிய புள்ளிகள், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி,கார்த்திகேசு சிவத்தம்பி, பிரபஞ்சன், சுஜாதா, வெங்கட்சாமிநாதன் என இந்த வரிசை நீண்டுகொண்டே போகிறது.
கண்களில் கண்ணீரை கசிய வைக்கும் ஒரு கடிதம்- புதுமைப்பித்தனால் அவரது மனைவி கமலாவுக்கு எழுதப்பட்டது- இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தி.க.சிவசங்கரன், கி.பி., இரண்டாயிரத்தில் தமிழ் இலக்கியம் பற்றிய தம் கவலையை எழுதியுள்ளார். சிறுகதை, புதினம் எழுதும் கதை எழுத்தாளர்களின் கட்டுரைகளும் அழகும் ஆழமும் கொண்டிருக்கின்றன. தொல்லியல், பழைய வரலாறு குறித்த கட்டுரைகளும் உள்ளன. சில நூல்களைப் பற்றிய திறனாய்வும் (விமர்சனம்) இடம்பெற்றுள்ளன.
மருதமுத்து எழுதியுள்ள இழிபிறப்பாளர் பற்றிய நீண்ட கட்டுரை ஆய்வு நோக்கில் தனியிடம் பெறுகிறது.
புறநானுாறு, குறுந்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியச் சான்றுகளுடன் மேலைநாட்டு ஆய்வாளர் கருத்தும் கொண்டு, மறுத்தும் ஏற்றும் அவர் கொண்டு செல்லும் நெறி மிகச்சிறப்பாகவுள்ளது. இழி குலத்தவர் என்று நாம் இந்நாளில் கருதுவோரை சங்க இலக்கியம், ‘கோ’ என,
கொண்டாடுகிறது.
பல்துறை, பல்பொருள் சார்ந்த இத்தொகுப்பு நூல் படிப்பாளிகள் இல்லத்திலும் மன இருப்பிலும் தவறாது இடம்பெற வேண்டும்.
கவிக்கோ ஞானச்செல்வன்