எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார்.
பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் தொடங்கி, ‘வாழ்வியல் கூறுகள்’ முடிய, 17 தலைப்புகளும் அரிய, ஆழ்ந்த, ஆய்வுக் கட்டுரைகள்.
காய்தல், உவத்தல் அகற்றி உண்மையைத் தேடிக் காணும் பெரியபுராண ஆய்வு நூல் இது. பேரறிஞர் டி.என்.ஆர்., ‘நாயன்மார்களை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை’ என்று முன்னுரையில் கூறியுள்ளார். அவரிடம் பயின்ற இந்த நூலாசிரியரோ, பணிவுடன், துணிவோடு அவரை மறுக்கிறார். ‘உங்களுக்கு இந்த உரிமையை தந்தது யார்?’ என்று கேட்கிறார். சங்கரன்கோவில் மா.பட்டமுத்து, ‘நந்தனார் நிகழ்ச்சியில் சேக்கிழார் ஒரு மாற்றம் செய்கிறார்’ என்ற சிவன் கருத்தை தன் கருத்துரையில் மறுத்துள்ளார்.
நக்கீரனைப் போல இந்த நூலாசிரியரும் தன் முரண்பட்ட கருத்துக்களை திறம்பட எடுத்து வைப்பதில் வெற்றி கண்டுள்ளார். பக்தியின் ஆழமும், சைவத்தின் நேயமும், சமூகப் பொதுவியல் சிந்தனையும் நூலாசிரியரின் வாதங்களுக்கு வலிமை சேர்க்கின்றன.
பொதுத் தொண்டு, திருத்தொண்டு இரண்டையும் விளக்கி, அப்பருக்கு மதிப்புயர் பொற்காசு கிடைத்ததன் காரணம் அவரது, ‘கைத்திருத் தொண்டு’ உழவாரப்பணி என்று காட்டிய இடம் அருமை!
‘இறைவன் நிலை’ கட்டுரையில் கி.பி.1713ல் விஜய ரகுநாத சேதுபதி, ராமேசுவரத்தில் நடத்திய சிவத் துரோகத்திற்காக மருமகன் தண்டத் தேவரின் தலையைத் துண்டித்தார். இதனால், தன் மகளிர் இருவரும் விதவையாயினர். இவ்வரலாற்றை மனுச்சோழனுடன் ஒப்பிட்டுள்ளது அரிய பதிவாகும். ‘தவறு செய்தவருக்குத் தண்டனை தவிர, கழுவாய் பெரியபுராணத்தில் சொல்லப்படவில்லை’ (பக்.50) என்பது இவரது ஆய்வு முடிவு.
இரு மனைவியரைக் காதல் கொண்டு, சிவன் அருளால் திருமணம் கொண்டவர் ஆயினும், ‘சுந்தரர் யோக வாழ்வைக் கடைபிடித்தார்’ என்று ‘நட்பின் நலம்’ கட்டுரையை நயம்பட முடித்துள்ளார்.
திருஞானசம்பந்தருக்கு அழுகையால் அமைந்த பெயர்கள், ‘ஐயர்’ என்று திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், திருநாளைப் போவாரையும் ஏன் அழைத்தனர் என்பதையும் விரிவாக ஆய்ந்து, ‘ஐயர்’ ஜாதிக்கு உரியதல்ல, சாதனைக்கு உரிய பெயர் என்பதை நிறுவுகிறார். ‘கற்பு அழித்தல்’ என்பது, கல்வியை அழித்தல் என்று விளக்குகிறார்.
கண்ணப்பரை வலப்பாகத்தில் சிவன் ஏற்றதும், சிவகோசரியாரின் பூஜையும் இறைவனுக்கு ஏற்புடையதே என்றும் கூறுகிறார்.
பெரியபுராணம் பெண்டிர் அடிமைகளல்லர். இயற்பகை, சிறுத்தொண்டர், கலிக்கம்பர், கழற்சிங்கர், கலியர் வரலாறுகளில் உள்ள பெண்டிரின் பக்தி நலத்தையும், மன வலிமையையும், துணிவையும் விரிவாக எழுதியுள்ளார்.
‘தீண்டாமையை அன்றே சேக்கிழார் எதிர்த்துள்ளார். ஜாதிச் சமரசமும், ஜாதியற்ற பக்தி உலகமும் பற்றி சேக்கிழார் கருத்துக்களே, பிற்காலத்தில் பாரதியாருக்கும் இருந்ததை ஒப்பிடுகிறார். தேவார மூவரின் தமிழ்த் தொண்டுகளை நாவாரப் போற்றிய சேக்கிழாரின் திறத்தை எடுத்துக்காட்டி, தெய்வத் தமிழை உயர்த்திப் பிடிக்கிறார்.
அவநெறி எது? அறநெறி எது? என்று காட்டியும், பெரியபுராண சொல் வழக்குகளை விளக்கியும் முடித்துள்ளார்.
பக்தி இலக்கியம் மட்டுமல்ல பெரியபுராணம், ‘பண்பாட்டுத் தமிழின் பெட்டகம்’ என்பதை வாத, விவாதங்களுடன் விளக்கும் அருட்களஞ்சியம் நூல் இது.
முனைவர் மா.கி.ரமணன்