தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் இந்நூலாசிரியர். ‘காலந்தோறும் பெண்’ என்ற அற்புதமான சமூகவியல் ஆய்வு நூலை தமிழுக்கு அளித்துப் புகழ் பெற்றவர். ஆனால், அவரது இறுதி ஆண்டுகளில், அவரை நடமாட விடாமல் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், ஒரு சக்கர நாற்காலியில் கட்டிப் போட்டு விடுகிறது, ‘காலம்.’ ஓய்ந்து போன உடல், ஓயாத உள்ள உளைச்சல், இவற்றினூடே காலத்தில் கரைந்து போன நாட்களை அசை போடுகிறார். அதன் விளைவு தான் இந்தச் சிறு நூல்.
கணவருடன் வாழ்ந்த இனிமையான நாட்கள். கணவரின் கடிகார மோகம், அவற்றைச் சேகரித்து வைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், கணவரின் பணியிடை மாற்றத்தால் அடிக்கடி ஊர் மாறி பட்ட அவதிகள், தன் நாவல்களுக்காக கள ஆய்வு செய்ய நடையாய் நடந்த அனுபவங்கள், சந்தித்த பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்கள், இறுதியில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் அவரது மனோநிலை...
கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மாறி மாறி அலை பாயும் அவரது எண்ண ஓட்டங்கள், ஒரு தொடர்பற்ற நினைவுச் சிதறல்களாகவே நமக்குத் தோன்றுகிறது.
சில இடங்களில் என்ன சொல்ல நினைக்கிறார் என்று புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறுவோம். எனினும், தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர் ஒருவரது இறுதிப் பதிவு இந்த நூல். இந்த நூல் படிக்கும் ராஜம் கிருஷ்ணனின் வாசக அன்பர்கள், ‘இது தான் காலத்தின் கோலம் போலும்’ என்று நெஞ்சம் நெகிழக்கூடும்.
மயிலை கே.சி.,