தமிழக வரலாற்று மாளிகையைத் தூக்கி நிறுத்தும் நாணயங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் தூண்கள் ஆகும். இத்தகு வரலாற்று ஆவணங்களே பழமைக்கு ஆதாரங்கள். ஆனால், கல்வெட்டுகளை, செப்பேடுகளைக் காண முடியுமே அன்றி, உரிய பயிற்சி இன்றி படிக்க முடியாது.
பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகளில் ஆர்வமும், திறனும் பெற்று, அதை யாரும் புரிந்து கொள்ளும் நோக்கில் நூலாக எழுதிய, இந்திய ஆட்சிப் பணித் துறை முனைவர் மு.ராசேந்திரன் பாராட்டத்தக்கவர். இந்த நூலில், 33 செப்பேடுகள் காலவாரியாக விளக்கப்பட்டுள்ளன. கி.பி., 305 முதல், கி.பி., 879 வரையுள்ள பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலச் செப்பேடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
இந்த நூல் எழுந்த களம் பற்றி நூலாசிரியர் எழுதியுள்ள, ‘தொடக்கப்புள்ளி’ முன்னுரை தேன்மழை. இதோ சில தூறல்கள். ‘கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள் அகழ்வு ஆய்வுகள் சரித்திரத்தின் உண்மைப் பதிவுகளாக உள்ளன. இலக்கியங்களில் மிகைப்படுத்தல் உண்டு. கிணற்றுக் கல்வெட்டில், ‘மனித வாழ்வு நிலையற்றது, அறம் செய்வீர்’ என்று செதுக்கப்பட்டுள்ளது. (பக்.25).
செப்பேடுகளில் காலம், மன்னர்கள், கொடை விபரங்கள் தெளிவாகத் தரப்பட்டு உள்ளன. கி.பி., 477ல் சிம்ம வர்மனின் சகரிப்பட்டினம் செப்பேடு, கர்நாடக மாநிலம் சிமோகா பகுதி வரை பல்லவர் ஆதிக்கம் பரவி இருந்ததற்கு சான்றளிக்கிறது.
பல்லவ மன்னர் வழங்கிய தானங்களுக்கு ஆதாரமான ஆவணமாக இந்த செப்பேடுகள் உள்ளன. இதை தேடித் தொகுத்து விளக்கி தெளிவோடும், படங்களோடும் வெளியிட்ட ஆசிரியரின் நுண்மாண் அறிவு போற்றத்தக்கதாகும். வரலாற்றுப் பாதையைப் போதிக்கும் நல்ல பாடநூல்.
முனைவர் மா.கி.ரமணன்