ஜாதி ஒழிக்கப்பட்டு, ஒரு சமுத்துவ சமூகம் அமைக்கப்பட வேண்டும் என்பது, அம்பேத்கரின் தணியாத தாகம். அதுவே, அவரை ஜாதியையும் அதைத் தாங்கி நிற்கும், இந்து மதத்தையும் எல்லாக் கோணங்களிலும் ஆய்வு செய்ய வைத்தது. அதனால் தான், இந்து மதம் இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க முடியாது; ஜாதியை ஏற்றுத் தாழ்வற்ற மனிதர்களாக வாழ வேண்டுமெனில், தலித்துகள் புத்த மதத்திற்கு மாறுவதே ஒரே வழி என்ற, முடிவுக்கு வருகிறார். அவரளவிற்கு, இந்து மதத்தைச் சமூகவியல் ரீதியாக ஆய்வு செய்தவர்கள் வேறு யாருமில்லை என்றே சொல்லலாம். அம்பேத்கர் மறைந்தபோது, அவர் ஒரு இந்து அல்ல. ஒரு பவுத்தர்.
அம்பேத்கரிடம் அவரது கொள்கைளையும், அரசியலையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, அவருக்கு மிக நெருக்கமான உதவியாளராகப் பணிபுரிந்தவர், பகவான் தாஸ். அம்பேத்கர் இயக்கத்தை, தன் வாழ்வில் கடைபிடித்தவர். அம்பேத்கரின் பல முக்கியமான நூல்களை வெளியிட்டவர். ‘நான் சிம்லா, டில்லி, மும்பை ஆகிய ஊர்களில் இருந்தபோது, பாபா சாகேப்பை உள்வாங்கிக் கொள்வதற்கும், அவருடன் மிக நெருக்கமாக இருந்த பலரைச் சந்திப்பதற்குமான வாய்ப்புகள் எனக்கு பலமுறை கிட்டின. இந்தச் சிறிய நூலில், அவற்றில் மிக முக்கியம் வாய்ந்த சில விவாதங்களையும், உரையாடல்களையும் மட்டுமே, குறிப்பிட முடிந்திருக்கிறது’ என்று, ஹிந்திப் பதிப்பிற்கான இந்நூலின் முன்னுரையில், பகவான் தாஸ் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், அவையே போதும் அம்பேத்கரின் குறிக்கோள்களை அறிந்து கொள்ள. தெளிவான மொழிபெயர்ப்பு. அம்பேத்கரை புரிந்து கொள்ள உதவும், ஒரு அருமையான நூல்.
– மயிலை சிவா