பிரமிக்க வைக்கும் அற்புத அறிவியல் குறித்த நூல். அற்ப கேள்விகள் என்று நாம் ஒதுக்கும் விஷயங்கள் தான் அறிவியலின் ஆதாரம் என்ற சுவாரஸ்யமான கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறது, ‘ஜீன் ஆச்சர்யம்’. கிரேக்க சிந்தனையாளன் பிதாகரசின் விநோதமான கேள்வியில் துவங்கும் மரபணு ஆராய்ச்சியின் வரலாறு, அரிஸ்டாட்டிலின் ஆதிக்கம், ஸ்வாமர்டாம் Vs கிராபின் சண்டை, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீயின் மார்பக அறுவை சிகிச்சை என்று படிப்படியாக நகர்ந்து செல்கிறது.
‘குரோமோசோமின் உள்ளே மரபணு இருக்கிறது, மரபணு XX அல்லது XYயாக இருக்கும் ’ என்று வறட்டு பாடம் நடத்தாமல், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை முன்வைத்து வாசகர்களுடன் நெருக்கத்தில் உரையாடுகிறார் ஆசிரியர். மரபணுவின் புரத அடுக்கு போன்ற சிக்கலான விஷயங்களும், எளிமையான தமிழ் அறிவியல் சொற்கள் மற்றும் புழக்க வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.
இடையிடையே வரும், வரலாற்று துணுக்குகள், நகைச்சுவை, வினோதங்கள் போன்றவை வாசகனை உற்சாகப்படுத்துகிறது. ஆசிரியரின் கதையாடல் பாணி, அறிவியல் வாசிப்பின் அயர்ச்சியை குறைத்து வாசிப்பை விரைவுபடுத்துவதோடு மட்டுமின்றி, பேசுபொருளின் பிரமிப்பை உணர்வதற்கும் பெரிதும் துணைபுரிகிறது. முக்கியமாக, விஞ்ஞானம் என்ற பெயரில் மலிந்த நாத்திக கருத்துக்களை புகுத்தாமல், படைப்பாச்சர்யத்தின் ஒரு பகுதியாகவே மரபணு கட்டமைப்பை விளக்கியிருப்பது புத்தகத்தின் சிறப்பம்சம். ‘ஜீன் ஆச்சர்யம்’ குறுகிய காலத்திற்குள் இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது, மக்களின் அறிவியல் ஆர்வம் பெருகியிருப்பதை காட்டுகிறது. இப்புத்தகத்தின் முக்கியமான குறை, படிக்க படிக்க அதன் பக்கங்கள் ஒவ்வொன்றாக பிய்ந்து கொண்டே வருவதுதான்.
– சலீம்