மேல் நாட்டவர்கள் தான் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்... 1980 – 83ம் ஆண்டுவாக்கில், நம் சட்டக் கல்லூரிகளில் ரோமன், ஆங்கிலேய, லத்தீன், அமெரிக்கர்கள் மட்டுமே சட்ட அறிஞர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து சட்ட அறிஞர்களாக ஏனோதானோவென்று அறிமுகம் செய்யப் பட்டவர்கள் மனுவும், சாணக்கியரும் (கவுடில்லியர்) மட்டுமே. தமிழில் நீதி நூல்கள் அதிகம் இருக்கின்றன என்ற உண்மையோ, தமிழ்மொழி சட்டக் கருத்துக்கள் கொண்டதாகவோ நம் சட்டக் கல்லூரிகளில் சொல்லித் தரப்படவில்லை என்பதே உண்மை.
ரோமானிய, லத்தீன் போன்ற பழமையான நாகரிகங்கள் தங்களுக்கென்று சட்ட நூல்களை வைத்திருக்கும்போது, அவர்களை விட மேம்பட்ட தமிழர் நாகரிகம் தங்களுக்கென்று ஒரு சட்ட வரையறை வைத்துக் கொள்ளவில்லையா? அல்லது நமக்குத் தான் அது தெரியாமல் போய் விட்டதா என அவர் சட்டம் பயின்ற காலத்தில் இந்நூலாசிரியர் யோசித்ததன் விளைவு தான் இந்த ஆய்வு நூல்.
உலகெங்கும் அறக் கருத்துக்கள் தான் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன. தமிழர்களின் தலைசிறந்த அறநூலான, திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவான ஒரு அறநூல் என்பதை எல்லா நாட்டு அறிஞர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய உலக நாடுகளின் பொருளாதார, சமூக, ஒழுக்க, சட்ட விதிமுறைகளுக்கு ஆதாரமாக உள்ள அடிப்படைச் சிந்தனைகள், திருக்குறளில் தெளிவுறக் கூறப்பட்டுள்ளன.
திருக்குறளில் உள்ள இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்கள், ஆய்ந்த புலமையோடு மிகப் பொறுமையாக ஆய்ந்து, ஏராளமான குறட்பாக்களை மேற்கோள்காட்டி, தற்கால நடைமுறையுடன் ஒப்பாய்வு செய்த ஆசிரியர் முயற்சி சிறப்பானது.
– மயிலை கேசி