இப்போதைய நேர்மையற்ற சில அதிகாரிகளை மனதில் நிழலாட விட்டு, இந்தப் புத்தகத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். எடுத்தாலும் தவறில்லை;
படித்து முடித்து இறுதியில், இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் அதிகாரியை நாம் பெற்றிருக்கிறோமே என, ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம்.
தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாண்டி, எப்படி ஒரு அதிகாரியாகச் செயல்படுவது என்பதற்கு, தன் அனுபவத்தின் மூலமும், தான் படித்த அரிய புத்தகங்களின் மூலமும் மனதைப் பதப்படுத்தித் தெளிந்திருக்கிறார் சைலேந்திர பாபு. போர் வீரனெனில் எப்படி இருக்க வேண்டும் என்பதை உதாரணமாக்கி, அன்றாட வாழ்க்கையில், அவரவர் துறைக்கேற்ப, போர்க்குணம் கொண்டு வெற்றி வாகை சூடுவது எப்படி என்பதை, 24 தலைப்புகளில் விவரிக்கிறார்.
அனல் தெறிக்கிறது எழுத்தில்; சூடு பறக்கிறது மனதில். இவர் சொல்லும் சில உத்திகளைப் பின்பற்றுவது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது; இருந்தாலும், மாதிரிக்கு ஒரு செயலில் இறங்கி, இவர் சொல்வதைப் பின்பற்றி, வெற்றி கிடைத்தால், இவரை நிச்சயம் பாராட்டி மகிழ்வீர்கள்!
வாழ்க்கையில் வெற்றி கொள்ள நினைப்பவர்கள், அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
– எஸ்.ரீஜா ராஜேஸ்வரி