உலகம் உருண்டை என்பதை கண்டறிவதற்கு முன், தான் வசிக்கும் இடத்தை தவிர, அடுத்த நிலப்பகுதி குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மனிதனுக்கு ஏற்பட்டது. செல்வம் சேர்க்கும் ஆர்வமும், வணிகமும், கலாசார, ஆன்மிக தேடலும், உலகம் முழுவதும் மனிதர்களை கடல் பயணம் செய்ய தூண்டின.
ஆனால், அன்றைய கடல் பயணம் மிகவும், எது நிலப்பகுதி, எது கடல் பகுதி என்பதை அறிவதற்கும், வழிகாட்டுவதற்கும், போதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் இல்லாத காலத்தில், நடந்த கடல் பயணங்கள் அனைத்துமே சாகசமே.
இத்தகைய கடல் பயணங்கள் அனைத் தும், புதிய எல்லைகளையும், புவியியல் ரகசியங்களையும், வெளி கொணர்ந்தன. இதுபோன்ற கடல் பயணங்களை பற்றிய சுவாரசிய வரலாற்றை விளக்குகிறது இந்த புத்தகம்.
பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன், கடல் பயணத்தில் அசகாய சூரர்களாக, விளங்கிய பாலிநேசியர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு முன், கப்பல் கட்டிய பெனிஸீயர்கள், உலகத்தை தன் கொடியின் கீழ் கொண்டு வர முயன்ற அலெக்சாண்டர் என ஆரம்ப கால வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
புத்தரின் புனித இடங்களை தேடி, இந்தியாவில் பயணம் மேற்கொண்ட, பாஹியான், யுவான் சுவாங் போன்ற வர்களின் வரலாற்று குறிப்புகள், வெனிசில் இருந்து, தமிழகம் வந்த, மார்க்கோ போலோ, துக்ளக் காலத்தில், பயணி இபின் பதுாதா என்ற பலரின் பதிவுகளையும் விரிவாக அலசுகிறது இந்த புத்தகம்.
‘உலகிலேயே, வளமான, புனிதமான தேசம் இந்தியா தான் என வியக்கும் மார்க்கோ போலோ, தென் தமிழகத்தில், பிரபலமான முத்து குளிக்கும் தொழில் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
‘அதிகபட்சம், 72 அடி, குறைந்த பட்சம், 12 அடி ஆழமுள்ள கடல் பகுதியில் கூட முத்துக்களை எடுக்கின்றனர். தம்மால் முடிந்த வரை கடலுக்குள் மூச்சை அடக்கி, கையில் கொண்டு போகும் வலை போன்ற பை நிறைய முத்துக்களை எடுத்து வருகின்றனர்.’ பக்கம் 275ல் தென் தமிழக கடல் பகுதியில், தான் கண்டதை மார்க்கோ போலோ விவரித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, வரலாற்று பதிவுகளை உலகிற்கு அளித்த மார்க்கோ போலோவை உலகம் எவ்வாறு ‘புரட்டு மன்னன்’ என, துாற்றியது என்பதையும் நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
துவக்கம் முதல், 1435ம் ஆண்டு வரை, இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தை பற்றிய, இபின் பதுாதாவின் குறிப்புகளையும் இதில் காணலாம்.