பெரியபுராணத்தைப் பற்றிப் பல நூல்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் அமைந்துள்ளன. சேக்கிழார் கூறிச் செல்லும் வரிசை முறையினைப் பின்பற்றவில்லை. அதனால் நாயன்மார்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் சேக்கிழார் கூறிச்செல்லும் முறையிலிருந்து மாறாமலும், மூல நூலைப் படிப்பவர்கள் பெறும் உணர்வினை இந்நூலைப் படிப்பவர்களும் பெறுதல் வேண்டும் என்ற எண்ணத்தோடும் இந்நூல் வெளி வருகின்றது. இதில் நயத்தைக்கூறும் விளக்க உரைகளோ, வருணனைகளோ, புனைந்துரைகளோ கலவாமலும் மூல நூலிலிருந்து விலகிச் செல்லாமலும், கருத்துகள் விடுபட்டுப் போகாமலும் எளிய இனிய உரைநடையில் வெளி வருகிறது.