அறிவியலும் – வரலாறும் புனையும் – இணைத்து பின்னப்பட்ட புதுமையான நாவல். மாமேதை ஐன்ஸ்டீனின் வாழ்வும் கோட்பாடுகளும் கதை நிகழ்வுகளாகவும், கதை பின்புலமாகவும் அமைந்து மனதை மயக்கும் படைப்பு.
இயற்பியல் உலகின் முடிசூடா மன்னர், சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த, 250 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத கண்டுபிடிப்புகளை தவறு என்று நிரூபித்தார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் – ரிலேட்டிவிட்டி ஆய்வுக் கட்டுரையில் அவர் – ‘காலம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது’ என்று சொல்கிறார். இது நியூட்டனின் ஸ்திரமான காலத்துக்கு எதிரானது. அதனால் ஐன்ஸ்டீன், நியூட்டன் காலத்தைப் பற்றிச் சொன்னது தவறு என்கிறார்.
போர்களிலும், போர் முறைகளிலும் ஐன்ஸ்டீனுக்கு பெரிய ஈடுபாடு இருந்ததே இல்லை. பொதுவாக வெற்றி, தோல்வி என்பதையே, ஐன்ஸ்டீன் விரும்பாதவர்.
எனவே, ஜெர்மனி போரில் ஈடுபடுவதை வெறுத்தார். ஜெர்மனி மட்டுமல்ல, எந்த நாடு போரில் ஈடுபட்டாலும் அதை அவர் வெறுக்கவே செய்தார். ப்ரிட்ஸ் ஹாபர் என்ற வேதியியல் விஞ்ஞானி – ஜெர்மன் ராணுவத்திற்கு உதவ விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, ‘சயின்ஸ் அகாடமி’யில் வைக்க துரிதப்படுத்தினார் என்பதை ஐன்ஸ்டீன் கேள்விப்பட்டு வருத்தமடைந்தார்.
ஐன்ஸ்டீன் மிக நன்றாக வயலின் வாசிக்கக்கூடியவர். இசையில் இருக்கக்கூடிய விகிதப்பண்பும், கணிதமும் ஐன்ஸ்டீனை எப்போதும் வசீகரித்து வந்துள்ளது.
பொது சார்பியல் கொள்கை நிரூபிக்கப்பட்டதற்குப் பின், ஐன்ஸ்டீனுக்கு நீங்காப் புகழ் கிடைத்தது. அது பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வழிகோலியது. பெரு வெடிக்கொள்கை, இருந்துளை என, இயற்பியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது இந்த பொது சார்பியல் கொள்கை தான்!
இதை எல்லாம், இந்த உன்னத நாவல், அழகாகப் பதிவு செய்கிறது!
– எஸ்.குரு