திருவள்ளுவர் அந்தக் காலத்தில் கூறிய வாழ்வியல் கருத்துகளும், வகுத்துத் தந்த மேலாண்மைக் கோட்பாடுகளும், 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன ஜெட் யுகத்திலும் வெற்றியை ஈட்டித் தரும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன!
வாழ்க்கையிலும், வர்த்தகத்திலும் வெற்றி பெற்ற ராக்பெல்லர், போர்டு, பில்கேட்றா போன்ற மேல்நாட்டவர்களும் சரி, டாடா, பிர்லா, அம்பானி, எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்பச் செட்டியார் போன்ற நம் நாட்டவர்களும் சரி, அவர்கள் திருக்குறள் படித்திருக்கின்றனரோ இல்லையோ...
வள்ளுவரின் மேலாண்மைக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களாகவே இருந்திருக்கின்றனர். உதாரணம்: வள்ளுவர் வகுத்துத் தந்திருக்கும் மேலாண்மைக் கோட்பாடுகளில் ஒன்று, சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது.
அதாவது வலிமையில் குறைந்த சிறிய படைகூட சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் போர் புரிந்தால் வலிமை மிக்க பெரும் படையைக்கூட வீழ்த்தி, வெற்றி பெற முடியும்! இதற்கு நூலாசிரியர் சுட்டும் உதாரணம்... சமீபத்தில் ஷாம்பு வியாபாரத்தில் பெரும் புரட்சியைச் செய்து வெற்றி யை பெருமளவில் குவித்த சி.கே.ரங்கநாதன் புரிந்த வர்த்தக விந்தை!
பெரும்பாலும் மேட்டுக்குடி மக்களே பயன்படுத்தி வந்த ஷாம்பு, பெரிய பாட்டில்களில் நகர்ப்புற பெரும் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்தது.
ஆனால், ரங்கநாதன் அந்த ஷாம்புவை சின்னச்சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து ‘சிக் ஷாம்பு’ என்று பெயரிட்டு ஒரு பாக்கெட் ஒரு ரூபாய் என்று கிராமப்புறப் பெட்டிக் கடைகளிலும், சாலை ஓரங்களில் இருந்த சிறு கடைகளிலும் சந்தைப்படுத்தினார்! நகர்ப்புறத்தில் இருந்து ஷாம்பு பயன்பாட்டைக் கிராமப் பக்கத்திற்கு இடம் பெயர்த்துச் சந்தைப்படுத்தியது, வரலாறு படைத்த விஷயம்.
இப்படிப் பல உதாரணங்களை சுருக்கமாக எடுத்துக்காட்டி மிக சுவாரசியமாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். எளிய ஆங்கில நூல். அனைவரும் படித்து வியக்கலாம்.
– மயிலை கேசி