மது என்னும் அரக்கனால் மாய்ந்து போன குடும்பங்கள் அழிந்து போன பண்பாட்டுக் கூறுகள், இருண்டு போன இளைஞனின் வாழ்க்கை என, மது மயக்கவாதி அந்திமப் பயணத்தின் போது ஏற்படும் அவஸ்தை தாங்காமல் ‘காப்பாத்துங்க; இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்’ என, உளறுவதாக இக்கதையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
அந்திமக் காலத்தில் நாட்களை எண்ணும் முதுமையின் உணர்வுகளும், எண்ண ஓட்டங்களும் படிப்போர் கண்களில் நீரை அரும்பச் செய்கின்றன.
அதிகார வர்க்கத்தின், பாலியல் வக்கிரங்களைத் தோலுரிக்கும் கதைகளும், திருநங்கையை உறவாக ஏற்கும் உளப்பாங்கும் இந்நூலுள் சுட்டிக் காட்டியுள்ளார்.
உன்னத காதலுக்கு ஜாதியும், சமயமும், ஊனமும் கூட தடையாய் இருப்பதில்லை என்பதை மென்மையாக உணர்த்தும் பாங்கும் சிறப்பு. அற்ப ஆசைகளை நகைச்சுவையாய் சித்தரிப்பதும் யதார்த்தமாய் அமைந்துள்ளன.
மது மயக்கவாதி, பொருள் மயக்கவாதி, ஜாதி மயக்கவாதி ஆகியோரின் அந்திமக் காலம் அவஸ்தையாய் தான் முடியும் என்பதை விளக்கும் சிறுகதைகளே இந்நூல்.
– புலவர் சு.மதியழகன்