பழந்தமிழை புதுக்கி, புத்துயிர் தந்து, தமிழுக்கு மறுவாழ்வு தந்தவன் மகாகவி பாரதியார். பாரதியும் தமிழும், பழமும் சுவையும் போல பிரிக்க முடியாதவை.
பாரதியை போற்றி பைந்தமிழ் அறிஞர், 40 பேர் எழுதிய தீந்தமிழ்க் கட்டுரைத் தொகுப்பே இந்நூலாகும். தேன் போன்ற இந்த கட்டுரைகள், 60 ஆண்டுகளுக்கு பின் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது, வற்றல் மரம் தளிர்ந்தது போலாகும்.
பரலி சு.நெல்லையப்பர், திரு.வி.க., – டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி.சே., பாரதிதாசன், கல்கி, நாமக்கல் கவிஞர், மு.வ., – ம.பொ.சி., – வ.ரா., திரிலோக சீத்தாராம் என்று தமிழுக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், பாரதியின் அனுபவங்களை மிகவும் சுவையுடன் எழுதியுள்ளனர்.
பாரதி சகாப்தம் கட்டுரையில் பாரதியாரின் கவிதை, தாகூரின் கீதாஞ்சலியை காட்டிலும் உயர்ந்தது. பாரதி உலக மகாகவி (பக். 27) என்று திரு.வி.க., போற்றுகிறார்.
பாரதியை பற்றி ராஜாஜி எழுதும் போது, பாரதி கவிதைகள் தமிழ் பக்தியையும், தைரியத்தையும், வேலை செய்ய வேண்டுமென்ற ஆசையையும் தூண்டி விடும் என்று கூறுகிறார். எளிய, இனிய பாரதியின் வசன நடையை பெ.தூரன் போற்றி எழுதியுள்ளார்.
அறிஞர் மு.வ., பாரதியாரின் முறையீடு இன்றைக்கும் பொருத்துவதாக கூறி, ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை, என்செய நினைத்தாய்! எனக்கு வரையாயோ?’ (பக் 81) என்னும் பாடலை நினைவுபடுத்துகிறார். ஆமாம் உண்மைதான், இன்றும் தமிழ்ச்சாதியின் விதி திருத்தி எழுதப்படவில்லை பாரதியை கண்முன் நிறுத்தும் தொகுப்பு நூல்.
– முனைவர் மா.கி.ராமணன்