பலா மரம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய நூல். சங்க இலக்கியங்களில் பலவு, பலா என்று அழைக்கப்படும் பலா மரத்தின் வகைகள் என்னென்ன? அவை எங்கு பயிரிடப்படுகின்றன? பயிரிடும் முறை குறித்த செய்திகள் முதன்மையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக நிகண்டுகள், இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் இவற்றில் பலா மரம் குறித்த செய்திகள், மருத்துவச் செய்திகள், மருந்து வகைகள் முதலான பல செய்திகளையும் காணலாம்.
பலா மரத்தைத் தல மரமாகக் கொண்ட கோவில்கள், பலா மரத்தைப் பெயரில் கொண்ட ஊர்கள், மாந்தர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பலா மரம், பழம், பிஞ்சு, கொட்டை முதலிய பலாவின் முழுமையான பகுதிகளின் மருத்துவப் பயன்பாடு, மருத்துவ முறை; சித்த மருத்துவத்திலும், நாட்டு மருத்துவத்திலும் பலாவின் பயன்பாடு ஆகிய தகவல்கள் சிறப்பானவை.
மேலும் பலா மதிப்புக் கூட்டுதல் குறித்தும், மதிப்புக் கூட்டுப்பொருள் குறித்தும், பலாவில் செய்யப்படும் உணவு வகை இருப்பதும் தலைப்புக்கு ஏற்ப முழு விளக்கமாக அமைந்திருக்கிறது.
பலாச்சுளைகள் விட்டமின், ‘ஏ’ சத்து நிறைந்தது. பலாவை ஊறுகாய், சட்னி, அப்பளம், வினிகர், தீம்பாடு முதலிய மதிப்புக் கூட்டுப் பொருளாக்கும் செய்முறைகள், கூட்டு, அவியல் என்பது மட்டுமன்றி, இதில் கட்லெட், பிரியாணி, சிப்ஸ், குருமா என இக்காலத்தோர் விரும்பும் உணவு வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பலா மரத்தால் செய்யப்படும் மத்தளம், கடம், பேழை, சிற்பம், யாழி, பெட்டகம் ஆகியவை, மதிப்புக் கூட்டுப்பொருள் குறித்த வண்ணப்படங்கள் அணி சேர்க்கின்றன. அனைத்துத் தரப்பினருக்கும் இனிப்பான ஒரு விருந்தாக இந்த நூல் அமையும்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்