சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன.
யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன.
உள்ளே மறைந்து கிடக்கும் நம் திறமைகள் இயல்பாக வெளிப்படுகின்றன என்பன போன்ற நம் சிந்தையைத் துாண்டும், 30 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் பட்டறிவும், இலக்கியப் புலமையும் மிளிர்கிறது. பயணங்களின்போது தாம் பெற்ற அனுபவத்தோடு கம்பனின் கை பிடித்து, வள்ளுவன் துணை கொண்டு கண்ணதாசனை மேற்கோள்காட்டி, பல உபகதைகள் மூலம் இனிய தமிழில் எளிய நடையில் வாழ்க்கையின் இலக்குகளை அடைவது எப்படி என்பதற்கான வழியை காட்டியது சிறப்பாகும்.
– புலவர் சு.மதியழகன்