மொழியின் ஆளுமையில், இன்று வட்டார மொழிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. புதினம், சிறுகதைகளின் நேர்முகப் பதிவே வட்டார மொழிகளை உயர்த்துகின்றன.
தஞ்சை வட்டார எழுத்துக்களை வண்டல் என்ற எல்லைக்குள் வைத்து நிகழ்த்திய உரையரங்கின் தொகுப்பே இந்நூல் ஆகும். திறனாய்வாளர்கள் தஞ்சை வட்டார வழக்குகள் பற்றிய மதிப்பீட்டையும், படைப்பாளர்களின் குரலையும் இங்கு பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் சந்திரபோஸ் படைப்புகள், பாவை சந்திரனின் நல்ல நிலம், சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் படைப்புகள், தமிழ்ச் செல்வியின் எழுத்தோவியங்கள், உத்தம சோழன் படைப்புகள் சி.எம்.முத்துவின் குரல், சோலைசுந்தரப் பெருமாளின் எழுதும் பாங்கு என்று படைப்பாளர்கள் ஆய்வு செய்யப்படுகின்றனர்.
வாழும் இந்த எழுத்தாளர்களின் படைப்புகள் திறனாய்வு செய்யப்படுவதன் மூலம் அவர்கள் மேலும் உற்சாகம் பெறுவர்.
கரிசல் இலக்கிய வழக்காட்சியை உருவாக்கி கி.ராஜநாராயணன் போன்றே, ‘வண்டல் இலக்கியம்’ உருவாக்கிய சோலைசுந்தரப் பெருமாள் பாராட்டத்தக்கவர்.
தஞ்சாவூரில் கவலையற்ற முகங்கள், தலையாட்டி பொம்மைகள், தட்டுகள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், தியாகையர் பஞ்சரத்ன இசை என்று க.நா.சு., அடுக்கிக் கொண்டே போகிறார்.
மருதமும், நெய்தலும் கலந்த தஞ்சையின் மண்வாசத்தை நெஞ்சை நிமிர்த்துமாறு இந்நூல் பதிவு செய்துள்ளது.
ந.பிச்சமூர்த்தி, தி.ஜா.ரா., எம்.வி.கரிச்சான்குஞ்சு போன்றோரை அடுத்து வரும் தஞ்சை எழுத்தாளர்களை நூல் திரையிட்டுக் காட்டுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்